Published : 24 Nov 2022 07:13 PM
Last Updated : 24 Nov 2022 07:13 PM

சிறார் குற்ற விவகாரங்களில் காவல் துறை வரைமுறையின்றி நடவடிக்கை: உயர் நீதிமன்றம் அதிருப்தி

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்

சென்னை: குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் தெளிவாக இருந்தும் சிறார் குற்றங்கள் தொடர்பான விவகாரத்தில் காவல் துறையினர் வரைமுறையின்றி கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் 16 வயது மாணவிக்கு, சக மாணவன் மஞ்சள் கயிறைக் கட்டும் காட்சிகள், சமூக வலைதளத்தில் பரவியது. மாணவனுக்கு எதிராக சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல, மாவட்ட குழந்தைகள் நலக்குழு, மாணவியை அரசு காப்பகத்தில் சேர்த்தது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில், மாணவியை மீட்க கோரி மாணவியின் தந்தை ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மாணவியை பெற்றோரிடம் ஒப்படைக்கவும், மாணவனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஜி.சந்திரசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "சமூக வலைதளங்கள் மூலம் உருவாகும் அழுத்தம் காரணமாக என்ன செய்வதென்று தெரியாமல் மாவட்ட ஆட்சியரும், காவல் துறை கண்காணிப்பாளரும் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கின்றனர். இருவரையும் கைது செய்ததன் மூலம் நீங்கள் என்ன சாதித்து விட்டீர்கள்?" என்று கேள்வி எழுப்பினர்.

அப்போது, நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் சந்துரு, "சட்டங்கள் மற்றும் உத்தரவுகள் எல்லாம் தெளிவாக உள்ளன. அதனை அமல்படுத்துவதில் தான் சிக்கல்கள் உள்ளது" என்று விளக்கம் அளித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், "இதுபோன்ற கைது நடவடிக்கைகளுக்கு உயர் அதிகாரிகளும் பொறுப்பேற்க வேண்டும். சிறார் சம்பந்தப்பட்ட வழக்குகளை கையாள்வது குறித்து காவல் துறை, மருத்துவத் துறை, குழந்தைகள் நல வாரியம், நீதிமன்றத்திற்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஆகியோர் இணைந்து ஆலோசனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x