Last Updated : 24 Nov, 2022 07:21 PM

2  

Published : 24 Nov 2022 07:21 PM
Last Updated : 24 Nov 2022 07:21 PM

ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது: மா.சுப்பிரமணியன் தகவல்

நிகழ்வில் அமைச்சர் மா. சுப்பிரமணியன்

புதுக்கோட்டை: அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த முறையில் பணிபுரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது என மாநில மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையில் இன்று (நவ.24) ஆட்சியர் கவிதா ராமு தலைமையில், பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் முன்னிலையில் மருத்துவக் கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில், ஆதனக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.48 லட்சத்தில் கட்டப்பட்ட புறநோயாளிகள் பிரிவு, கொடும்பாளூரில் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட செவிலியர் குடியிருப்பு மற்றும் கணபதிபுரம், பெருங்களூர், ஆட்டாங்குடி, வாராப்பூர், செட்டியாபட்டி, செம்பட்டிவிடுதி, தேன்கனியூர் ஆகிய இடங்களில் தலா ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையக் கட்டிடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ”புதுக்கோட்டையில் வட்டார அரசு மருத்துவமனை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படும். அதற்கான அரசாணை இன்று வெளியிடப்படும். தேவையான கட்டிட வசதிகள், மருத்துவ உபகரணங்கள் இருப்பதால் தேவையான பணியாளர்கள் ஒரு மாதத்துக்குள் நியமிக்கப்படுவர்.

தமிழகத்தில் பிரசவத்தின்போது அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பதை தடுப்பதற்காக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் யோகா, மூச்சுப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் வருங்காலங்களில் குழந்தை பிறப்புக்கான அறுவைச் சிகிச்சை குறையும் என எதிர்பார்க்கிறோம்.

கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்தில் கவனக்குறைவாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களை கைது செய்வது குறித்து காவல் துறை முடிவு எடுக்கும். இதற்கிடையில், மருத்துவர்களின் தவறான சிகிச்சையை மறைப்பதாக அரசு மீது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சுமத்துவது தவறானது.

மருத்துவ தேர்வு வாரியம் மூலம் தேர்வான செவிலியர்களை பணி நிரந்தரம், பணி வரன்முறை செய்யும் பணி படிப்படியாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. ஒப்பந்த முறை மற்றும் அவுட் சோர்சிங் முறையில் சேர்ந்துள்ள செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது” என்றார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, “புதுக்கோட்டை காமராஜபுரத்தில் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும். அறந்தாங்கி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை மேம்படுத்த ரூ.46 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

இந்த விழாவில் எம்எல்ஏகள் வை.முத்துராஜா (புதுக்கோட்டை), எம்.சின்னதுரை (கந்தர்வக்கோட்டை), மாவட்ட சுகாதார துணை இயக்குநர் ராம்கணேஷ், முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கந்தர்வக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. எம்.சின்னதுரை பேசியபோது, “புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து அவசர சிகிச்சை எனும் பெயரில் தஞ்சாவூருக்கு நோயாளிகளை அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதைத் தடுத்து, இங்குள்ள மருத்துவமனையில் கூடுதல் கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்றித்தர வேண்டும்.

மேலும், கந்தர்வக்கோட்டை தொகுதியில் உள்ள கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி, கீரனூர் ஆகிய அரசு மருத்துவமனை மற்றும் கிராமப்புறங்களில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை. தொடர்ந்து 10 ஆண்டுகளாக இந்தத் தொகுதி புறக்கணிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதோடு, தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். கந்தர்வக்கோட்டையில் தாய், சேய் சிறப்பு சிகிச்சை வசதியை ஏற்படுத்த வேண்டும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x