Last Updated : 24 Nov, 2022 03:21 PM

 

Published : 24 Nov 2022 03:21 PM
Last Updated : 24 Nov 2022 03:21 PM

புதுச்சேரியில் ‘ஒரு ரூபாய்’ சிறப்பு பேருந்துகளை மீண்டும் இயக்கக் கோரி கல்லூரி மாணவர்கள் முற்றுகை

புதுச்சேரி: புதுச்சேரியில் மீண்டும் ஒரு ரூபாய் சிறப்பு பேருந்துகளை இயக்கக் கோரி, கல்லூரி மாணவர்கள் இன்று உயர் கல்வி தொழில்நுட்ப கல்வி இயக்குனரத்தை முற்றுகையிட்டனர். இதனிடையே, இனி ஒரு ரூபாய் பேருந்தை இலவசமாகவே இயக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அம்மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.

புதுச்சேரியில் கரோனா காலகட்டத்திற்கு பிறகு மாணவர் சிறப்பு பேருந்து நிறுத்தப்பட்டது. தற்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டும் பல மாதங்களாக சிறப்பு பேருந்து இயக்கப்படவில்லை. இந்த நிலையில் நிறுத்தப்பட்ட இலவச சிறப்பு மாணவர் பேருந்தை உடனடியாக இயக்க வலியுறுத்தி லாஸ்பேட்டையில் உள்ள உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இயக்குனரக அலுவலகத்தை கல்லூரி மாணவர்கள் முற்றுகையிட்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் தாகூர் கலைக் கல்லூரி, காலாப்பட்டு அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, கதிர்காமம் மகாத்மா காந்தி அரசு கலைக் கல்லூரி, லாஸ்பேட்டை மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டோர் கூறுகையில், "கிராமப் பகுதிகளில் இருந்து நகரப் பகுதிக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் மாணவ, மாணவிகள் நாள்தோறும் தனியார் பஸ் கட்டணமாக ரூ.50 செலவு செய்யும் சூழல் உள்ளது இதை கருத்தில் கொண்டு உடனடியாக நிறுத்தப்பட்ட மாணவர்களுக்கான ஒரு ரூபாய் பேருந்தை உடனடியாக இயக்க வேண்டும்" என வலியுறுத்தினர்.

இதனிடையே, "இன்னும் 20 நாட்களில் சிறப்பு பேருந்து செயல்படும்" என தொழில்நுட்ப கல்வி இயக்குனரக தனி அதிகாரி சௌமியா உறுதி அளித்ததின் பேரில் மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இனி கட்டணமில்லை... இலவசம் - அமைச்சர் தகவல்: இந்த நிலையில், நிகழ்வொன்றில் பங்கேற்ற கல்வியமைச்சர் நமச்சிவாயம் சிறப்பு பேருந்துகள் எப்போது இயக்கப்படும் என்பதற்கு விளக்கம் தந்துள்ளார். அதில், "மாணவர்களுக்கு தற்போது ஒரு ரூபாய் கட்டணத்தில் சிறப்பு பேருந்து இயக்குவதற்கு பதிலாக இலவசமாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது அனைத்து பணிகளும் முடிந்து 36 பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை அனுமதித்துள்ளது. மீதமுள்ள 39 பேருந்துகளையும் சரிபார்த்து போக்குவரத்துத் துறை அனுமதி தந்ததவுடன் இயக்குவோம்" என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x