Published : 24 Nov 2022 10:54 AM
Last Updated : 24 Nov 2022 10:54 AM

கடலூர் மாவட்டம் பாலைவனமாக அரசு துணை போகக்கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல் 

ராமதாஸ் | கோப்புப்படம்

சென்னை: "பரங்கிப்பேட்டை பகுதியில் சாயக்கழிவு ஆலை அமைப்பதற்கான சைமா அமைப்பின் முயற்சிகளுக்கு தமிழக அரசு எந்த வகையிலும் ஆதரவளிக்கக் கூடாது. மாறாக, சைமாவின் சாயக்கழிவு ஆலைக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டையில் சாயக்கழிவு ஆலை அமைப்பதற்கான பணிகளை தீவிரப்படுத்த சைமா எனப்படும் தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் திட்டமிட்டிருக்கிறது. சுற்றுச்சூழலை சீரழிக்கும் இந்தத் திட்டத்திற்கு தொழில் வளர்ச்சி என்ற பெயரில் தமிழ்நாடு அரசின் ஆதரவை பெறும் முயற்சியில் சைமா அமைப்பு தீவிரமாக ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டையை அடுத்த பெரியப்பட்டு மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் 304 ஏக்கர் பரப்பளவில் ஜவுளி பூங்கா அமைக்கும் திட்டம் கடந்த 2004-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஜவுளிப் பூங்கா என்ற பெயரில் அப்பகுதியின் வளர்ச்சிக்கான திட்டம் போன்று அறிவிக்கப்பட்டாலும், உண்மையில் இது சாயக்கழிவு ஆலை தான். கோவை, திருப்பூர் மாவட்டங்களிலுள்ள சாயப் பட்டறைகளில் இருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத கழிவுகளை கொண்டு வந்து, தண்ணீரைக் கலந்து கடலில் விடுவது தான் இந்தத் திட்டத்தின் உண்மையான நோக்கம் ஆகும். இதை புரிந்து கொண்டதால் தான் சாயக்கழிவு ஆலைக்கு எதிராகவும், சுற்றுச்சூழலைக் காக்கவும் மக்களைத் திரட்டி பாமக பல போராட்டங்களை நடத்தியது. அதனால் சாயக்கழிவு ஆலை அமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஆனால், சாயக்கழிவு ஆலை பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று துடிக்கும் சைமா அமைப்பின் நிர்வாகிகள், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை கடந்த திங்கட்கிழமை சந்தித்து, இந்தத் திட்டம் வேலைவாய்ப்புக்கும், தொழில்வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்பதால் அதன் பணிகளை திசம்பர் மாதத்திற்குள் மீண்டும் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். ஆனால், இந்தத் திட்டத்தை மீண்டும் தொடங்குவது குறித்து முதலமைச்சர் எந்த உத்தரவாதமும் அளிக்காதது மனநிறைவளிக்கிறது.

பரங்கிப்பேட்டையில் அமைக்கப்படவிருக்கும் சாயக்கழிவு ஆலை ஒரு கோடி லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்டது ஆகும். ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள சாயப்பட்டறை கழிவுகளை சாலைவழியாக கொண்டு வந்து இந்த ஆலையில் வைத்து சுத்திகரிப்பது தான் சைமாவின் திட்டமாகும். கோவை பகுதியில் பல கோடி லிட்டர் சாயக்கழிவுகள் வெளியாகும் நிலையில், அவை முழுவதையும் இங்கு சுத்திகரிக்க முடியாது. அதனால், முடிந்தவரை சுத்திகரித்து, மீதமுள்ள கழிவுகளை தண்ணீருடன் கலந்து கடலில் செலுத்த சைமா திட்டமிட்டுள்ளது. இதற்கு வசதியாக சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நிலத்தில் 3.5 கிமீ தொலைவுக்கும், கடலுக்குள் 1.5 கிமீ தொலைவுக்கும் குழாய்கள் அமைக்கப்படவுள்ளன.

பரங்கிப்பேட்டை சைமா சாயக்கழிவு ஆலை அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தால், அது மிகப்பெரிய சுற்றுச்சூழல் சீர்கேடாக அமையும். ஒரு நாளைக்கு ஒரு கோடி லிட்டர் சாயக்கழிவு நீரை சுத்திகரிக்க வேண்டுமானால், அதற்காக பூமியிலிருந்து பல கோடி லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்க வேண்டி இருக்கும். அதனால் நிலத்தடி நீர்மட்டம் மிக மோசமாக பாதிக்கப்படும். மற்றொருபுறம், முழுமையாக சுத்திகரிக்கப்படாத ஒரு கோடி லிட்டர் சாயக்கழிவு நீர் தினமும் கடலில் கலக்கவிடப்பட்டால் மீன்வளம் பாதிக்கப்படும். நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் கடல்நீர் உட்புகுந்து 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் பாதிக்கப்படும்; மீன்வளம் குறைவதால் ஏராளமான மீனவ கிராமங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும்.

கோவை மண்டலத்தில் உள்ள ஜவுளி ஆலைகளின் வளர்ச்சி முக்கியம் தான். ஆனால், அதற்கான கட்டமைப்புகள் அந்த மண்டலத்தில் தான் உருவாக்கப்பட வேண்டும். அதற்கு பதிலாக முழுக்க முழுக்க விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் கடலூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு எதிரான சாயக்கழிவு ஆலை அமைக்க முயல்வது நியாயம் அல்ல. இந்த முயற்சியை அரசு ஆதரிக்கக்கூடாது. கோவை மண்டல சாயப்பட்டறை முதலாளிகள் வளமாக வாழ்வதற்காக கடலூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வயிற்றில் அடிப்பதை பாமக எக்காலத்திலும் அனுமதிக்காது.

ஒருபுறம் என்எல்சி நிறுவனம் நிலத்தடி நீர்வளத்தையும், சுற்றுச்சூழலையும் சூறையாடிக் கொண்டிருக்கிறது. மற்றொருபுறம் கடலூர் சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள வேதி ஆலைகள் அவற்றின் நச்சுக்கழிவுகளை வெளியேற்றி சுற்றுச்சூழலையும், இயற்கை வளத்தையும் சிதைத்துக் கொண்டிருக்கின்றன. இன்னொருபுறம் சாயக்கழிவு ஆலை கடல்வளத்தையும், நிலத்தடி நீர்வளத்தையும் சுரண்டுவதற்கு அனுமதிக்கப்பட்டால் கடலூர் மாவட்டம் பாலைவனமாகி விடும். அப்படி ஒரு நிலை ஏற்படுவதற்கு அரசே துணை போகக்கூடாது.

எனவே, பரங்கிப்பேட்டை பகுதியில் சாயக்கழிவு ஆலை அமைப்பதற்கான சைமா அமைப்பின் முயற்சிகளுக்கு தமிழக அரசு எந்த வகையிலும் ஆதரவளிக்கக் கூடாது. மாறாக, சைமாவின் சாயக்கழிவு ஆலைக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x