

சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி தொடர்கிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். கட்சியில் தவறு செய்தவர்கள், கட்சி வளர்ச்சிக்கு தடையாக இருப்பவர்கள் நீக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் தேநீர் கடை ஒன்றை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பாஜக ஓபிசி அணியின் மாநில பொதுச் செயலாளர் சூர்யா சிவா - சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரண் இடையிலான சர்ச்சைக்குரிய உரையாடல் தொடர்பான முதல்கட்ட விசாரணை திருப்பூரில் விசாரணை குழு முன்னிலையில் 24-ம் தேதி (இன்று) நடைபெறுகிறது.
அதில், 2 பேரிடமும் விசாரணை நடத்தி, விளக்கம் கேட்கப்படும். பின்னர், விசாரணை அறிக்கையை அந்த குழுவினர் தாக்கல் செய்வார்கள். அதன் அடிப்படையில், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் விடப்போவது இல்லை. இது தனிப்பட்ட உரையாடல் என்று அவர்கள் சொன்னாலும்கூட, கட்சியின் ஒழுக்க கொள்கையில் இருந்து யாரும் தப்ப முடியாது.
காயத்ரி ரகுராம் மீதான நடவடிக்கை வெறும் ஆரம்பம்தான். பாஜகவின் இதுபோன்ற அதிரடிநடவடிக்கை தொடரும். லட்சுமணரேகையை யார் தாண்டினாலும் விடமாட்டேன். பாஜக வளர்ச்சிக்குதடைக் கற்களாய் இருப்பவர்களைநீக்கித்தான் ஆகவேண்டும். புதியவர்களையும் சேர்க்க வேண்டும்.
ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது காலத்தின் கட்டாயம். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆன்லைன் ரம்மிக்கு தமிழக அரசு தடை கொண்டு வந்தபோதே, பாஜக வரவேற்றது. ஆளுநர் தரப்பில் வேறு ஏதாவது கருத்துகள் கேட்கப்பட்டுள்ளதா என்று எனக்கு தெரியாது. தமிழக அரசு கொண்டு வந்துள்ள ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு பாஜகவின் முழு ஆதரவு உண்டு.
தேசிய ஜனநாயக கூட்டணியை பாஜக நாடாளுமன்றக் குழு உருவாக்கியது. கூட்டணியில் எந்த கட்சிகள் இருக்க வேண்டும், என்ன மாதிரி தலைவர்கள் இருக்க வேண்டும் என்பதை அந்த குழுதான் முடிவு செய்தது. அதன்படி, அதிமுக உடனான பாஜகவின் கூட்டணி தொடர்கிறது. கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக, எல்லாவற்றையும் ஏற்க வேண்டியது இல்லை.
தவிர, 2024 எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியாது. பாஜகவின் வளர்ச்சி அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கூட்டணி எப்படி அமையும், எத்தனை இடங்கள் கொடுப்பார்கள், கூட்டணியில் அனைவரையும் சேர்க்க முடியுமா என்பது குறித்து மத்தியக் குழு முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.