Published : 24 Nov 2022 06:42 AM
Last Updated : 24 Nov 2022 06:42 AM
சென்னை: திமுக ஆட்சிக்கு மக்களிடத்தில் கிடைத்த நல்ல பெயரை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே, ஆட்சியின் மீது சேற்றைவாரிப் பூசும் வகையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேற்றுசந்தித்து 10 பக்க மனுவை அளித்தார். அதில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. கோவை குண்டுவெடிப்பு தொடர்பாக மத்திய உளவு ஏஜென்சிகள் தகவல் அளித்தும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில், திமுக அமைச்சர் தங்கம்தென்னரசு அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவையில் நிகழ்ந்த கார்வெடிப்பு சம்பவத்தில் தமிழக காவல்துறை துரிதமாக விசாரணை நடத்தி 12 மணி நேரத்துக்குள் குற்றவாளி முபின் என கண்டுபிடித்தது. இந்த சம்பவத்தில் பன்னாட்டு அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்ததையடுத்து, தேசிய புலனாய்வு முகமையிடம் இவ்வழக்கு விசாரணை ஒப்படைக்கப்பட்டது.
அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெறும் சில சம்பவங்களை வைத்து தமிகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து போயிருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் ஒருமாயத் தோற்றத்தை, மாயாஜால பிம்பத்தை உருவாக்க முற்பட்டுள்ளார். இது முற்றிலும் அபத்தமானது.
சட்டம்-ஒழுங்கு குறித்து அதிமுகவினருக்கு பேச எவ்வித அடிப்படை தார்மிக உரிமை கிடையாது. கடந்த அதிமுக ஆட்சியில்தூத்துக்குடியில் குருவிகளை சுடுவதைபோல 10 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சாத்தான்குளத்தில் காவல் நிலையத்தில் தந்தையும், மகனும் இருவர் அடித்துக் கொல்லப்பட்டனர்.
உண்மையிலேயே நாட்டின் வளர்ச்சியில், நல்ல திட்டங்கள் மீது அதிமுகவுக்கு ஆர்வம் இருந்திருந்தால் தமிழக அரசு சட்டசபையில் இயற்றும் சட்டங்களை நிறைவேற்ற அவர்கள் ஆளுநரிடம் அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், ஆட்சியின் மீது சேற்றை வாரிப் பூசும் வகையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர்.
அரசு மீது குற்றச்சாட்டு தெரிவித்தால் அதற்கு உரிய ஆதாரங்கள் இருந்தால் அதை தாராளமாக நீதிமன்றத்தில் வழக்காகத் தாக்கல் செய்யலாம். பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டுமே தவிர, அடிப்படை ஆதாரம் இல்லாமல் பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டு கூறக் கூடாது.
திமுக ஆட்சிக்கு மக்களிடத்தில் கிடைத்த நல்ல பெயரை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவேதான் எவ்வித ஆதாரமும், முகாந்திரமும் இல்லாமல் சேற்றை வாரி இறைக்கின்றனர்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடுப்பதற்காக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள சட்டத்துக்கு ஆளுநர் விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும். இதற்காக சட்டத்துறை அமைச்சர் ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். இவ்வாறு தங்கம் தென்னரசு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT