

மழையில்லாமல் பயிர்கள் கருகியதால், விவசாயிகளுக்கு தமிழக அரசு வறட்சி நிவாரணம் அளிக்க வேண்டும் என்று டெல்டா மாவட்ட விவசாயிகள், திருச்சி ஆட்சியர் அலுவலகம் முன்பாக இன்று (வெள்ளிக்கிழமை) எலிக்கறி உண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மாதந்தோறும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்படும் குறைதீர்ப்புக் கூட்டத்தைப் புறக்கணித்த விவசாயிகள் சில கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தினர்.
காரணம் என்ன?
நடப்பாண்டின் வட கிழக்குப் பருவ மழை பொய்த்துப்போனதாலும், நிலத்தடி நீரின் அளவு வெகுவாகக் குறைந்து போனதாலும் தமிழகம் முழுக்க 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டும், மாரடைப்பாலும் உயிரிழந்தனர்.
தண்ணீர்ப் பற்றாக்குறை தொடர்வதால் கால்நடைகளைப் பராமரிப்பதும் விவசாயிகள் மத்தியில் சிரமமாகவே இருக்கிறது. இதனால் விவசாயிகளும், விவசாயப் பணியில் ஈடுபடும் கூலித் தொழிலாளர்களும் நகரங்களுக்கு புலம்பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு திருச்சி மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டம் என்று அறிவிக்கக் கோரியும், பயிர்கள் கருகிய விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விவசாயிகள் எலிக்கறியை உண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும் வங்கி அதிகாரிகள், கடனை உடனடியாகத் திருப்பிச் செலுத்தவேண்டும் என்று நெருக்கடி தருவதாகவும், புதிய கடன்கள் வழங்குவதில் தாமதப்படுத்துவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அங்கப்பிரதட்சணம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் வங்கி அதிகாரிகள் முன்னிலையில், ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.
படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்