Published : 24 Nov 2022 04:20 AM
Last Updated : 24 Nov 2022 04:20 AM

ஐரோப்பிய செயற்கைகோள் உதவியுடன் வானிலை முன்னறிவிப்பு செய்யும் வேளாண் பல்கலை.

கோவை: ஐரோப்பிய செயற்கைகோள் உதவியுடன் வானிலை தகவல்களை 12 நாட்களுக்கு ஒருமுறை அரசுக்கு தெரிவித்து, விவசாயிகளுக்கு அறிவிக்கப்படுவதாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வெ.கீதா லட்சுமி தெரிவித்தார்.

இது தொடர்பாக நேற்று அவர் கூறும்போது, ‘‘பேரிடர் காலங்களில் ஏற்படும் பயிர் சேதங்களை செயற்கைக்கோள் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, தகவல்களை உடனுக்குடன் திரட்டுவதன் மூலம் விவசாயிகளுக்கு உரிய காலத்தில் நிவாரணங்களை வழங்க முடியும். வேளாண் பல்கலைக்கழகம், ஜெர்மன் நிதியுதவியுடன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் ஏற்படும் வறட்சி, வெள்ள பாதிப்புகளை கணக்கிட்டு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்துக்கு அளித்து வருகிறது.

காலநிலைக்கேற்ற புதிய பயிர் ரகங்களை பயிர் செய்தும், கால்நடை வளர்ப்பு, காளான் வளர்ப்பு ஆகியவற்றின் மூலமும் விவசாயிகளுக்கு நிலையான வருமானத்தை உறுதி செய்ய முடியும். மேலும், ஐரோப்பிய செயற்கைகோள் உதவியுடன் வானிலை தகவல்களை 12 நாட்களுக்கு ஒருமுறை அரசுக்கு தெரிவித்து, விவசாயிகளுக்கு அறிவிக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் மாவட்டம், வட்டம், கிராம வாரியாக பயிர் பரப்பளவு, மகசூல் கணக்கிடுதல், செயற்கைக்கோள், ஆளில்லா விமானம் மூலம் எடுக்கப்படும் படங்களைக்கொண்டு பாதிப்புகளை கணக்கிடுதல் ஆகியவையும் செயல்படுத்தப்படும்’’ என்றார். அப்போது, காலநிலை காப்பீட்டுத் திட்ட இயக்குநர் ஜோகென் ராம்கி, நீர் நுட்ப மைய இயக்குநர் செ.பழனிவேலன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மத்திய அரசு செயலர் ஆய்வு: மத்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலர் அபிலாஷ் லிகி நேற்று வேளாண் பல்கலைக்கழகம் வந்தார். அங்கு இயங்கிவரும் துல்லிய வேளாண்மை மேம்பாட்டு மையம் மற்றும் தேசிய வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தின் வேளாண் தொழில்நுட்ப வணிக காப்பகம் மற்றும் ஒருங்கிணைந்த தேனீ வளர்ப்பு மேம்பாட்டு மையம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இவற்றின் செயல்பாடுகளை துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி கூடுதல் செயலரிடம் விளக்கினார். அதைத் தொடர்ந்து தொழில் முனைவோர் மற்றும் இத்திட்டத்தின் இதர பயனாளிகள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x