

சென்னை: தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா என சென்னையில் 3 பேரிடம் மத்திய உளவுத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கடந்த மாதம் கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில், உயிரிழந்த இளைஞர் தற்கொலை படைத்தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் அண்மையில் கர்நாடகாவிலும் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. அதிலும் தீவிரவாதிகளின் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில், நவீன கருவிமூலம் (சிம்பாக்ஸ்) வெளிநாட்டு அழைப்புகளை உள்நாட்டு அழைப்புகளாக மாற்றி சிலர் சென்னையில் போன் பேசி வருவதாக மத்திய உளவுத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தொடர் விசாரணையில் அண்ணாநகர் மற்றும் அமைந்தகரையைச் சேர்ந்த 3 பேர் இதேபோல் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாக மத்திய உளவுத் துறை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
சிம்பாக்ஸ் கருவி பறிமுதல்: இதையடுத்து நேற்று இரவு அண்ணாநகரில் சந்தேகத்தின்பேரில் 3 பேரை பிடித்து மத்தியஉளவுத் துறை போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில், அவர்கள் வெளிநாடுகளுக்கு அதிக நேரம் போனில்பேசியது தெரியவந்தது. அவர்கள்தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்தார்களா அல்லது வேறு காரணங்களுக்காக யாருடனாவது தொடர்பில் இருந்து வந்தார்களா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களிடமிருந்து 100-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள், ஏராளமான சிம்பாக்ஸ் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.