Published : 23 Nov 2022 07:15 PM
Last Updated : 23 Nov 2022 07:15 PM

சென்னை உள்ளிட்ட 4 மண்டலங்களில் அறுவை சிகிச்சை தணிக்கைக் குழு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

அறுவை சிகிச்சை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட அமைச்சர்

சென்னை: தமிழகத்தில் மதுரை, கோவை, திருச்சி மற்றும் சென்னை ஆகிய 4 மண்டலங்களில் அறுவை சிகிச்சை தணிக்கை செய்யும் குழு அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மாணவி பிரியா தவறான சிகிச்சையால் உயிரிழந்ததைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்பாக இன்று (நவ.23) சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் கருத்தரங்கு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் இருந்து, 600-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்குபெற்ற, அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர்களுக்கான பாதுகாப்பான அறுவை சிகிச்சை நெறிமுறைகள் மற்றும் தொடர் அறுவை சிகிச்சை முறைகளுக்கான கருத்தரங்கு நடைபெற்றது.

தமிழ்நாடு முழுவதிலும் 5000-க்கும் மேற்பட்ட மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களுக்கான நெறிமுறைகள், பாதுகாப்பான அறுவை சிகிச்சைகள் குறித்து இந்தக் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது. தமிழ்நாட்டை பொறுத்தவரை தினந்தோறும் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள், மருத்துவக் கல்வி இயக்குநரகம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநரகம் ஆகிய 3 துறைகளிலும் ஏறக்குறைய 10,000 அறுவை சிகிச்சைகள் ஒவ்வொரு நாளும் நடைபெறுகிறது.

இந்தக் கருத்தரங்கின் மூலம் எடுக்கப்படுகின்ற முடிவுகள், தமிழ்நாடு முழுவதிலும் இருக்கின்ற 5000-க்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கும் அறிவிக்கப்படவுள்ளன. இந்த கருத்தரங்கில் அறுவை சிகிச்சை நெறிமுறைகள் குறித்த கையேடு வெளியிடப்பட்டது. அதில், அறுவை சிகிச்சையின் போது கையாளப்பட வேண்டிய விதிமுறைகள் இடம்பெற்றுள்ளது. உலக சுகாதார நிறுவனம் போன்ற பல்வேறு உயர் அமைப்புகளின் அறிவுறுத்தல்கள் இந்தப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இந்தப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற அனைத்து அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மருத்துவர்களுக்கும் வழங்கப்படவுள்ளன.

இதோடு மட்டுமல்லாது அறுவை சிகிச்சைகளில் ஏற்படுகின்ற இறப்புகள் குறித்தும் ஒரு தணிக்கை முறை இன்று அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் மதுரை, கோவை, திருச்சி மற்றும் சென்னை ஆகிய 4 மண்டலங்களில் இந்த தணிக்கை முறை செய்யும் குழு அமைக்கப்படவுள்ளது. இந்தக் குழுக்களில் அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவ நிபுணர், மயக்கவியல் நிபுணர், எலும்பு சிகிச்சை நிபுணர் என்று 4 உயர் மருத்துவ சிகிச்சை நிபுணர்கள் இடம் பெறுவார்கள்" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x