Published : 23 Nov 2022 07:38 PM
Last Updated : 23 Nov 2022 07:38 PM
சென்னை: சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க காவல் துறையினருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாமல் பொய்க் குற்றச்சாட்டுக்களை தெரிவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ஆதரவற்றோர் இல்லத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்த காவல் துறையினர் ஏழு பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரி ஆதரவற்றோர் இல்லத்தை சேர்ந்த கலா மற்றும் முத்துக்குமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, "சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக காவல் துறையினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கூறுவதை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. எந்த ஆதாரமும் இல்லாமல் காவல் துறையினருக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோன்ற வழக்குகளின் காரணமாக, காவல் துறை தங்கள் சட்டபூர்வமான கடமையை அமைதியான முறையில் மேற்கொள்ள முடியாமல் போகிறது. காவல் துறையினருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டால் அதன் உண்மை தண்மை குறித்து விசாரித்த பிறகுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்கும் போது ஏராளமான பிரச்சினைகளை சந்திக்கும் காவல் துறையினர், தங்கள் கடமையை சுதந்திரமாகவும், நியாயமாகவும் செய்ய அனுமதிக்க வேண்டும். காவல் துறையினருக்கு எதிரான இந்த வழக்கில் எந்த ஆதாரமும் இல்லை” எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், ஏழு காவல் துறையினருக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம், ரூ.35 ஆயிரத்தை வழக்கு செலவாக வழங்க மனுதாரருக்கு உத்தரவிட்டார்.
இந்த தொகையை நான்கு வாரங்களில் காவல் துறை ஆணையரிடம் வழங்க வேண்டும் என்றும், அதனை காவல் துறை ஆணையர் சம்பந்தப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT