Last Updated : 23 Nov, 2022 05:21 PM

 

Published : 23 Nov 2022 05:21 PM
Last Updated : 23 Nov 2022 05:21 PM

சாத்தான்குளம் வழக்கு: கைதான போலீஸார் மீது குற்றச்சதி பிரிவு சேர்ப்பதை கீழ் நீதிமன்றம் முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு

உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை.

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான போலீஸார் மீது சிபிஐ 2-வது குற்றப்பத்திரிகை அடிப்படையில் குற்றச்சதி பிரிவின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்வது தொடர்பாக கீழ் நீதிமன்றம் முடிவெடுக்கலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிபிஐ ஏடிஎஸ்பி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ''சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் உயிரிழந்தனர். இது தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் போலீஸார் என 9 பேரை சிபிஐ கைது செய்தது.

இந்த வழக்கு மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 2 குற்றப்பத்திரிகைகளை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட போது ஸ்ரீதர் உட்பட 9 பேர் மீது குற்றச்சதி (இபிகோ- 120 பி) பிரிவிலும் குற்றச்சாட்டு பதிவு செய்யுமாறு சிபிஐ விடுத்த கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார். இது தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேரும் குற்றச்சதி புரிந்தமைக்கு போதிய ஆதாரங்கள் உள்ளன. குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் காவல் துறையைச் சேர்ந்தவர்கள். மேலும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விசாரணையை முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உரிய பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யாமல் போவது குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக அமையும். எனவே, சிபிஐ மனுவை தள்ளுபடி செய்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரனை ரத்து செய்து, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேர் மீதும் குற்றச்சதி மற்றும் உரிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் காணொலி வழியாக நீதிமன்றத்தில் ஆஜராகி, சிபிஐ கோரிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்தார். வழக்கில் ஏற்கெனவே உரிய பிரிவுகள் சேர்க்கப்பட்டிருப்பதால், புதிதாக குற்றச்சதி பிரிவு சேர்க்க வேண்டியது இல்லை. சிபிஐ மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார். இதையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கில் நீதிபதி இளங்கோவன், சிபிஐ மனுவை தள்ளுபடி செய்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. சிபிஐ தாக்கல் செய்த இரண்டாவது குற்றப்பத்திரிகை அடிப்படையில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது குற்றச்சதி பிரிவை சேர்ப்பது தொடர்பாக கீழமை நீதிமன்றம் முடிவெடுக்கலாம். வழக்கு முடிக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x