Published : 23 Nov 2022 01:38 PM
Last Updated : 23 Nov 2022 01:38 PM

பொது சுகாதாரத்துறையின் நுற்றாண்டு நிறைவு மாநாடு: 2000 மருத்துவர்கள் பதிவு செய்துள்ளதாக அமைச்சர் மா.சு தகவல்

பாடலை வெளியிட்டுள்ள அமைச்சர் மா.சு

சென்னை: பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெறும் சர்வதேச மருத்துவ மாநாட்டில் கலந்து கொள்ள 2000 மருத்துவர்கள் பதிவு செய்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் பொது சுகாதார துறையின் நூற்றாண்டு விழா சிறப்பு பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், செயலாளர் செந்தில்குமார், பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், பொதுசுகாதாரத்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தெருக்குறல் அறிவு என அறியப்படும் பிரபல இசை கலைஞர் அறிவு, பொது சுகாதார துறை நூற்றாண்டு விழாவிற்காக எழுதி, இசையமைத்து பாடிய பாடலை அமைச்சர் மா.சுப்ரமணியன் வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "நூற்றாண்டுவிழா விழா கொண்டாடும் வேளையில் பொது சுகாதாரத்துறை நூற்றுக்கும் மேற்பட்ட நோய்களை கண்டுள்ளது. போலியோ, காலரா உள்ளிட்ட பல நோய்களை பொது சுகாதாரத்துறை ஒழித்துள்ளது. தற்போது கரோனாவையும் இந்த துறை சிறப்பாக கையாண்டுள்ளது. பொது சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழா வரும் டிசம்பர் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை மாமல்லபுரத்தில் சர்வதேச மருத்துவ மாநாடாக கொண்டாடப்படவுள்ளது. இதில் பங்கேற்க 2000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இதுவரை பதிவு செய்துள்ளனர். 250க்கும் மேற்பட்ட மருத்துவ ஆய்வறிக்கைகள் வந்துள்ளன. தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை நடத்தும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அதிக எண்ணிக்கையிலான மருத்துவர்கள் பதிவு செய்ததில் இருந்தே, இந்த துறையின் தரத்தை புரிந்து கொள்ளலாம்.

பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் பேசும்போது, "பொது சுகாதாரத்துறை கடந்த 100 அண்டுகளாக செயல்பட்டு வருகிறது. நிறைய பணிகளை செய்து வருகிறோம். மருத்துவம் குறித்த விழிப்புணர்வை அடுத்த தலைமுறையினருக்கு ஏற்படுத்தவும், பொது சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தவுமே இந்த நூற்றாண்டு விழா கொண்டாடப்பட இருக்கிறது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x