Published : 23 Nov 2022 03:01 PM
Last Updated : 23 Nov 2022 03:01 PM
சென்னை: "மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பணியிடங்களை தனியாருக்குத் தாரைவார்க்கும் அரசாணை 152-ஐ உடனடியாக ரத்து செய்வதோடு, தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் அனைத்து தற்காலிக பணியாளர்களையும் பணிநிரந்தரம் செய்து, உரிய ஊதியம் வழங்க வேண்டும்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் தூய்மை, திடக்கழிவு மேலாண்மை, பொது சுகாதாரம், குடிநீர் வழங்கல், பாதாள சாக்கடை, தெருவிளக்கு பராமரித்தல், வரி வசூலித்தல் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பணியிடங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் தமிழ்நாடு அரசின் முடிவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசினைப்போல அரசுப் பணியிடங்களைத் தனியார்மயமாக்கி தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.
நாட்டு மக்கள் நலமாக வாழ ஒவ்வொரு நாளும் இடைவிடாது தூய்மைப்படுத்திக் காக்கும் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்களும் மிகுந்த போற்றுதலுக்கும் மரியாதைக்கும் உரியவர்கள். மற்றவர்கள் முகம் சுளித்து, வெறுத்து ஒதுக்கும் பொருட்களை அர்ப்பணிப்புணர்வுடன் தூய்மைப்படுத்தும் பெருமதிப்புமிக்க அவர்களின் மகத்தான பணியென்பது வாழ்த்தி வணங்கக்கூடிய மாண்புடையது. இயற்கைப் பேரிடர், நோய்த்தொற்றுப் பரவல் உள்ளிட்ட அசாதாரணக் காலங்களிலும் உயிரைப் பணயம் வைத்துச் செய்யக்கூடிய பணியாகவும் உள்ளது. அத்தகைய போற்றுதற்குரிய பணியாற்றிவந்த மாநகராட்சி, நகராட்சிப் பணியாளர்களை, குறைந்த சம்பளத்தில் தற்காலிகப் பணியாளர்களாகவே வைத்திருந்து, உழைப்பினை உறிஞ்சிவிட்டு, தற்போது திடீரெனப் பணிநீக்கம் செய்ததென்பது அவர்களின் எதிர்காலத்தை இருளாக்கும் கொடுங்கோன்மையாகும்.
கடந்த 2021 ஆம் ஆண்டு சனவரி மாதம், சென்னை மாநகராட்சியின் தற்காலிகத் தூய்மைப் பணியாளர்கள் அன்றைய அதிமுக அரசால் எவ்வித முன்னறிவிப்புமின்றி ஒரே நாளில் பணிநீக்கம் செய்யப்பட்டுத் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர். அதிமுக அரசின் அக்கொடுஞ்செயலை அப்பொழுது கடுமையாக எதிர்த்ததோடு, திமுக ஆட்சி அமைந்தால் பணிநீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று வாக்குறுதியும் அளித்த திமுக, தேர்தலில் வென்று ஆட்சி அதிகாரத்தை அடைந்த பிறகு அவர்களைப் பணியமர்த்தாமல் பச்சைத் துரோகம் புரிந்தது.
அதன் தொடர்ச்சியாக, தற்போது மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் பணியிடங்களையும் தனியாருக்கு ஒப்படைப்பதாக அரசாணை வெளியிட்டு, அவர்களை வீதியில் இறங்கி போராட வைத்திருப்பது திமுக அரசின் தொடர் தொழிலாளர் விரோதப்போக்கினையே வெளிக்காட்டுகிறது.
ஏற்கெனவே, பல ஆண்டுகள் பணியாற்றியும், பணி நிரந்தரம் செய்யப்படாமையால் அரசு வழங்கக்கூடிய குழு காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட இதர உரிமைகள் எதுவும் உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்களுக்கு முறையாகக் கிடைக்காத சூழலே நிலவுகிறது. கரோனா பெருந்தொற்றின்போது அர்ப்பணிப்புணர்வோடு ஓய்வின்றிப் பணியாற்றிச் சுற்றுப்புறத் தூய்மையையும், மக்களின் உடல்நலத்தையும் பாதுகாத்த அவர்களின் பணியின் மாண்பை உணர்ந்து, பணி நிரந்தரம் செய்து, உரிய ஊதியம் வழங்கி ஊக்கப்படுத்தியிருக்க வேண்டிய தமிழ்நாடு அரசு, அதற்கு மாறாகப் பணிநீக்கம் செய்து பழிவாங்குவதென்பது சிறிதும் அறமற்ற செயலாகும்.
ஆகவே, மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பணியிடங்களை தனியாருக்குத் தாரைவார்க்கும் அரசாணை 152-ஐ உடனடியாக ரத்து செய்வதோடு, தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் அனைத்து தற்காலிக பணியாளர்களையும் பணிநிரந்தரம் செய்து, உரிய ஊதியம் வழங்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT