இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம் - திமுக அறிவிப்பு

உதயநிதி ஸ்டாலின் | கோப்புப்படம்
உதயநிதி ஸ்டாலின் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: திமுகவின் 15-வது உட்கட்சித் தேர்தல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அக்கட்சியின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் திமுகவின் உட்கட்சித் தேர்தல் நடந்தது. இதில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கான நியமனங்களுக்கு அக்கட்சியின் பொதுக்குழுவிலும் ஒப்புதல் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் பல்வேறு அணிகளுக்கான நியமனங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அமைப்பு ரீதியாக திமுகவில் 20-க்கும் மேற்பட்ட அணிகள் உள்ளன.

இதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின், மகளிர் அணித் தலைவராக விஜயா தாயன்பன், மகளிர் அணி செயலாளராக ஹெலன் டேவிட்சன் ஆகியோர் நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இளைஞர் அணி துணைச் செயலாளர்கள், மகளிர் அணி செயலாளர், இணை செயலாளர், துணை செயலாளர்கள், மகளிர் தொண்டர் அணிச் செயலாளர், இணைச் செயலாளர், துணைச் செயலாளர்கள், மகளிர் அணி பிரச்சாரக் குழு செயலாளர்கள், மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர்கள் மற்றும் மகளிர் ஆலோசனைக் குழு பொறுப்பாளர்கள் ஆகியோரின் பெயர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின்: திமுக இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி தேர்வு செய்யப்பட்டார். தற்போது இரண்டாவது முறையாக அவர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, அவருக்கு கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

திமுகவின் மகளிர் அணி செயலாளராக பதவி வகித்து வந்த கனிமொழி கருணாநிதிக்கு, கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பதவி கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஹெலன் டேவிட்சன்னுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in