எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 2026 அக்டோபரில் முடிவடையும்: நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 2026 அக்டோபரில் முடிவடையும்: நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
Updated on
1 min read

மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணிக்கான செலவு ரூ.1977.8 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. கட்டுமானப் பணி 2026-ம் ஆண்டு அக்டோபரில் முடிவடையும் என உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்து, கட்டுமானப் பணியை தொடங்க உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, 36மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணி முடிவடையும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு முடிக்கப்பட்டது.

ஆனால் உறுதியளித்தபடி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணி தொடங்கவில்லை. இதனால் மத்திய அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ரமேஷ் நீதிமன்ற அவமதிப்பு மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனு விசாரணைக்கு உகந்ததா?, இல்லையா? என்பதுதொடர்பான விசாரணை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பி.புகழேந்தி அமர்வில் நேற்று நடைபெற்றது. அப்போது மத்திய அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கூறியிருப்பதாவது: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை ரூ.1,264 கோடியில் அமைக்க17.12.2018-ல் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. தற்போதுமதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான செலவு ரூ.1,977.8 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானக் காலம் 5 ஆண்டுகள் 8 மாதம் (2021 மார்ச் முதல் 2026 அக்டோபர் வரை). அதிக செலவு மற்றும் அதிக காலக்கெடுவுக்கு சுகாதாரத் துறையிடம் அனுமதிபெறப்பட்டுள்ளது. நிதித்துறையிடம் அனுமதி பெற வேண்டி உள்ளது. இதனால் மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிபதிகள், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் அக்டோபர் 2026-ல் நிறைவடையும் என்பது தொடர்பாக மத்திய அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in