Published : 23 Nov 2022 04:00 AM
Last Updated : 23 Nov 2022 04:00 AM

அரசு பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூல்: பயணிக்கு ரூ.10,000 வழங்க குன்னூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

உதகை: அரசு பேருந்தில் அதிக கட்டணம் வசூலித்த நடத்துநர், கூடுதல் தொகையை திரும்ப வழங்குவதோடு, நுகர்வோருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டுமென, அரசுப் போக்குவரத்து கழகத்துக்கு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கோடேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சு.மனோகரன்‌. ஓய்வுபெற்ற பள்ளி தலைமை ஆசிரியரான இவர், குன்னூர் நுகர்வோர் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார். 2019-ம் ஆண்டு மஞ்சூரிலிருந்து கீழ்குந்தா கிராமத்துக்கு அரசுப் பேருந்தில் பயணித்தபோது ரூ.7 கட்டணம் வசூலித்திருக்கின்றனர். கீழ்குந்தாவிலிருந்து அதே பேருந்தில் மீண்டும் மஞ்சூருக்கு பயணித்தபோது ரூ.11 கட்டணம் வசூலித்திருக்கின்றனர்.

ஒரே வழித்தடத்தில் இயக்கப்பட்ட ஒரே பேருந்தில் ஏன் இந்த கட்டண உயர்வு?' என நடத்துநரிடம் விளக்கம் கேட்டபோது அவரிடமிருந்து முறையான பதில் கிடைக்கவில்லை. இதனால் உதகையிலுள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வந்தது.

இதுதொடர்பாக நுகர்வோர் நீதிமன்ற தலைவர் சித்ரா பிறப்பித்த உத்தரவில், "பேருந்து நடத்துநர் வசூலித்த கூடுதல் தொகையை பயணி மனோகரனுக்கு திரும்ப வழங்க வேண்டும். நுகர்வோருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு இழப்பீடாக, அரசு போக்குவரத்து கழகம் ரூ.10,000 வழங்க வேண்டும். வழக்கு செலவாக ரூ.3,000 போக்குவரத்து கழக மேலாளர் வழங்க வேண்டும். வழக்கு தொடுத்த மனோகரனின் கோரிக்கைப்படி, பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்ட 19-1-2019 முதல் இன்று வரை சாதாரண பேருந்தில் பயணிகளிடம் கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை கணக்கிட்டு, மாவட்ட நிர்வாகத்திடம் வழங்க வேண்டும்.

இந்த தொகை மாவட்ட மக்களிடையே நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்த பயன்படுத்த வேண்டும். இழப்பீட்டு தொகையை இரண்டு மாதங்களுக்குள் வழங்கவில்லை என்றால், 12% வட்டியுடன் வழங்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்ப்பு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதுகுறித்து சு.மனோகரன் கூறும்போது, "நீலகிரி மாவட்ட மக்கள் முழுக்க முழுக்க அரசுப் பேருந்துகளை மட்டுமே நம்பி இருக்கின்றனர். சமவெளிப் பகுதிகளைக் காட்டிலும், மலை மாவட்டத்தில் 20% கூடுதல் கட்டணம் வசூலித்து வருகின்றனர். சாதாரண பேருந்துகளை விரைவு பேருந்து என்ற பெயரில் கூடுதலாக கட்டணம் வசூலித்து வருகின்றனர். அரசுப் போக்குவரத்து கழகம் மக்களை நேரடியாக சுரண்டி வருகிறது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x