தமிழகத்தில் பாஜக காலூன்றவே காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

ஜி.ராமகிருஷ்ணன்
ஜி.ராமகிருஷ்ணன்
Updated on
2 min read

தருமபுரி: ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தையும், பாஜக-வையும் தமிழகத்தில் காலூன்றச் செய்யவே காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் தருமபுரியில் தெரிவித்தார்.

தருமபுரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரவைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் கூறியது: மற்ற கட்சி ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் எம்எல்ஏ-க்களை விலைகொடுத்து வாங்கி பாஜக ஆட்சி அமைத்து வருகிறது. இது முடியாத மாநிலங்களில் அங்கு நடைபெறும் ஆட்சியை ஆளுநரைக் கொண்டு சீர்குலைக்கும் நடவடிக்கையை மேற்கொள்கிறது. ஆளுநர்கள் மூலம் பாஜக போட்டி அரசாங்கம் நடத்தி வருகிறது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, திருக்குறள் ஆன்மீகம் தொடர்புடையது என்று பேசி திருக்குறளை அவமதித்துள்ளார். தமிழகஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளோம்.

காசியில் நடத்தப்படும் தமிழ்ச் சங்கமம் என்ற நிகழ்ச்சி, தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தமும், பாஜக-வும் காலூன்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை. அந்த நிகழ்ச்சியில், ‘தமிழ் மூத்த மொழி’ என்று பிரதமர் பேசியுள்ளார். ஆனால், நடைமுறையில் இந்தி, சமஸ்கிருத மொழிகளுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றனர். இம்மொழிகளின் வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் நிதியில் 10-ல் ஒரு பங்கு நிதியைக் கூட தமிழ் மொழி வளர்ச்சிக்கு மத்திய அரசு ஒதுக்கவில்லை.

ஓர் ஆண்டுக்கு 2 கோடி நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்போம் என்று 2014-ம் ஆண்டு தெரிவித்த பிரதமர் மோடி, 8 ஆண்டுகளுக்கு பின்னர் வெறும் 76 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை அளித்துள்ளார். இது, மக்களை ஏமாற்றும் செயல். விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று பாஜக கூறிய நிலையில் இன்றுவரை விவசாயிகள் தற்கொலை நீடிக்கிறது.

திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வர முயற்சி மேற்கொள்ள வேண்டும் என முதல்வரை கேட்டுக் கொள்கிறோம். மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ள அபராதத் தொகை கூடுதலாக உள்ளது. இதை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில், தேசிய புலனாய்வு முகமை தனது கடமையை முழுமையாக செய்யவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றம் சாட்டுகிறது. பாஜக-வுடன்கூட்டணி அரசாங்கம் நடந்த மாநிலங்கள் சிலவற்றில் பாஜக கூட்டணியில் இருந்து அக்கட்சிகள் வெளியேறியுள்ளன. எனவே, வரவிருக்கும் மக்களவை தேர்தலில் பாஜக-வை தோற்கடிக்கும் வகையில் தமிழகத்திலும், தேசிய அளவிலும் மகத்தான அணி உருவாகும் நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பாஜக-வுக்கு எதிராக திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட மதசார்பற்ற கட்சிகளின் ஒற்றுமை தொடரும். இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்ச்சியின்போது, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து, மாவட்ட செயலாளர் குமார் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர். தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என முதல்வரை கேட்டுக் கொள்கிறோம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in