

ஓசூர்: 75 ஆண்டுகளாக மின் வசதி இல்லாத குடிசலூர் மலைக் கிராமத்தில் வீடுகளுக்கு மின் இணைப்பு நேற்று வழங்கப்பட்டது.
தேன்கனிக்கோட்டை தாலுகா பெட்டமுகிலாளம் ஊராட்சிக்கு உட்பட்ட மலைக் கிராமம் குடிசலூர். இங்கு வசிக்கும் மக்களுக்கு இதுவரை மின்வசதி இல்லாமல், சிமினி விளக்கு உதவியுடன் இரவு பொழுதை கடந்து வந்தனர். இதையடுத்து, தளி எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் எடுத்த முயற்சியை தொடர்ந்து 90 வீடுகளுக்கு மின் இணைப்பு கோரி மின் வாரியத்தில் மனு அளிக்கப்பட்டது.
இதில், முதல்கட்டமாக 17 வீடுகளுக்கு மின் இணைப்பு நேற்று வழங்கப்பட்டது. இதையொட்டி, கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்எல்ஏ ராமச்சந்திரன், வீடுகளுக்கு மின் இணைப்பு சேவையை தொடங்கி வைத்தார். இது தொடர்பாக கிராம மக்கள் கூறும்போது “நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்தும் நாங்கள் இருளில் தான் வாழ்ந்து வந்தோம்.
தற்போது, மின் இணைப்பு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றனர். இந்நிகழ்ச்சியில், ஒன்றியக் கவுன்சிலர்கள் மாரப்பன், பிரசாந்த், ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் கிருபானந்தன், ஊராட்சித் தலைவர்கள் முனிராஜ், யசோதாமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.