Published : 23 Nov 2022 07:39 AM
Last Updated : 23 Nov 2022 07:39 AM

ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் பல்லவன் இல்லத்தில் முற்றுகைப் போராட்டம்: போலீஸாருடன் தள்ளுமுள்ளு

போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) மற்றும் அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பினர் இணைந்து சென்னை பல்லவன் சாலையில் உள்ள அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக தலைமையகம் முன்பு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: ம.பிரபு

சென்னை: ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லவன் இல்லத்தில் நடத்திய முற்றுகைப் போராட்டத்தில் போராட்டக்காரர்கள் -போலீஸார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போக்குவரத்துக் கழகத்தில் உள்ள ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) மற்றும் அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நலஅமைப்பினர் இணைந்து பல்லவன்சாலையில் உள்ள அரசு விரைவுபோக்குவரத்துக் கழக தலைமையகம் முன்பு நேற்று போராட்டம் நடத்தினர்.

சிஐடியு பொதுச் செயலாளர் ஆறுமுகநயினார் தலைமை வகித்தார். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் திடீரென பல்லவன் இல்லத்தை முற்றுகையிட முயன்றதால் போலீஸார் அவர்களை தடுத்துநிறுத்தி கலைந்து செல்ல வலியுறுத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் இரும்பு தடுப்பு வேலிகளை மீறி உள்ளே நுழைய முயன்றனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து சிஐடியு பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார் கூறியதாவது: லாபம் இல்லை என தெரிந்தும் நஷ்டமான வழித்தடங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் ஓடுகின்றன. இதனால் போக்குவரத்து துறைக்கு ஏற்படக்கூடிய இழப்பை ஈடுகட்ட தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி, பணப்பலன்களை கொண்டு போக்குவரத்துக் கழகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

கடந்த 2020-ம் ஆண்டு மரணமடைந்த தொழிலாளிக்குகூட இதுவரை எந்த பணப்பலனும் கிடைக்கவில்லை. ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன்கள் மட்டும் ரூ.1200 கோடிக்கு மேல் நிலுவையில் உள்ளது. அதேபோல் அவர்களுக்கு 7 ஆண்டுகளாக அகவிலைப்படி உயரவில்லை. ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். ஒப்பந்த நிலுவைத் தொகை, கரோனா நிதி போன்றவற்றை உடனே வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x