

சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்தார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் 6,039 பேர்பாதிக்கப்பட்டிருந்தனர். நடப்பாண்டில் ஜனவரி 1-ம் தேதி முதல் இதுவரை 5,290 பேருக்கு டெங்குபாதிப்பு ஏற்பட்டுள்ளது. காய்ச்சலின் தீவிரத்தால் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகபட்சமாக ஜனவரியில் 980 பேரும், பிப்ரவரியில் 684 பேரும், அக்டோபரில் 616 பேரும்,செப்டம்பரில் 572 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாதத்தில் மட்டும் 506 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் டெங்கு பாதிப்பு இருந்தாலும் சென்னை, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாகவே காணப்படுகிறது.
இது தொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் கூறியதாவது: தமிழகத்தில் டெங்கு பாதிப்புசற்று அதிகமாகவே உள்ளது. கடந்த ஒரு வாரமாகத் தாக்கம் குறைந்து வருகிறது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைத்து தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேவையான இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்த மாவட்டங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேவையான மருந்துகள் அரசிடம் உள்ளன. குடியிருப்பு வளாகங்கள், வணிக வளாகங்கள், பள்ளிகள், கடைகள், திருமண மண்டபங்கள், திரையரங்குகள், குடியிருப்புபகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
நல்ல தண்ணீரில் வளரக்கூடிய ‘ஏடிஸ்’ வகை கொசுவால் டெங்கு பரவுகிறது. வீடு மொட்டை மாடி,திறந்தவெளி இடங்களில் கிடக்கும் தேவையற்ற பொருட்களில் மழைநீர் தேங்குவதால், அவ்வகைகொசுக்கள் அதிகளவில் இனப்பெருக்கம் ஆகின்றன. எனவே,பொதுமக்கள் தங்கள் வீடு சுற்றுப்புறங்களை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என்றார்.