

கோயம்பேடு சந்தையில் பாயின்ட் ஆஃப் சேல் இயந்திரம் மூலம் வர்த்தகத்தில் ஈடுபடும் காய்கறி வியாபாரிகள் அதிகரித்து வருகின்றனர்.
கோயம்பேடு காய்கறி சந்தையில் 1900-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு தினந்தோறும் ரூ.4 கோடி முதல் ரூ.7 கோடி வரை காய்கறிகள் விற்பனை நடைபெறும். ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததைத் தொடர்ந்து, சில்லறை நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதால் மக்களின் வரத்து 80 சதவீதம் வரை குறைந்தது. இதனால் கடந்த 3 வாரங்களாக சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. அப்போது காய்கறி விலையை குறைத்து விற்றும் வாங்க ஆளில்லை.
இந்நிலையில் தற்போது, மெல்ல மெல்ல வியாபாரம் சூடுபிடித்து வருகிறது. அதற்கு, சில மொத்த வியாபாரிகளும், சில்லறை வியாபாரிகளும் பாயின்ட் ஆஃப் சேல் இயந்திரத்தை பயன்படுத்தத் தொடங்கியுள்ளதும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக கோயம்பேடு மலர், காய், கனி அங்காடி வியாபாரிகள் நலச்சங்க செயலர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறியதாவது:
நஷ்டம் அடைந்தாலும் இந்த தொழிலைத்தான் செய்ய வேண்டியுள்ளது. எங்களுக்கு வேறு தொழில் தெரியாது. பிரதமரின் அறிவிப்பால் கோயம்பேடு சந்தையில் கடந்த 3 வாரமாக வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டது உண்மை. அப்போது பொதுமக்களிடம் பழைய நோட்டுகள்தான் இருந்தன. தற்போது புதிய ரூ.2000 நோட்டுகளும், குறைந்த அளவில் ரூ.100, ரூ.50 நோட்டுகளும் புழக்கத்தில் உள்ளன. மேலும் மத்திய அரசு பாயின்ட் ஆஃப் சேல் இயந்திரத்தை பயன்படுத்துமாறு அறிவுறுத்தி வருவதால் சிறு வியாபாரிகள் பலரும், அந்த இயந்திரத்தை வாங்கி பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
கோயம்பேடு சந்தையில் கடந்த மாதம் வரை 99 சதவீதம் பணப் பரிவர்த்தனைதான் நடைபெற்று வந்தது. மத்திய அரசின் நிர்ப்பந்தத்தாலும், தொழிலை செய்தாக வேண்டும் என்ற அழுத்தம் காரணமாகவும், இங்கு 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பாயின்ட் ஆஃப் சேல் இயந்திரத்தை தற்போது வாங்கியுள்ளனர். பலர் விண்ணப்பித்து, இயந்திரத்தின் வருகைக்காக காத்திருக்கின்றனர். இதனால் தற்போது 20 சதவீத வியாபாரம் அதிகரித்துள்ளது. மத்திய அரசு விரைவாக புதிய ரூ.500 நோட்டுகளை புழக்கத்தில் விட்டால், எங்கள் தொழில் ஓரளவு மேம்படும் என்றார்.
ரூபாய் நோட்டு தட்டுப்பாடு காரணமாக காய்கறி விலை தற்போது குறைந்துள்ளதா என அவரிடம் கேட்டபோது, “நவம்பர் 9 முதல் இரு வாரங்கள் வரை விலை குறைந்ததற்கு அதுதான் காரணம். தற்போது சீசன் என்பதால், காய்கறி அதிகமாக வருகிறது. அதனால் கடந்த ஒரு வாரமாக விலை குறைந்துள்ளது” என்றார்.