

டிசம்பர் 15-ம் தேதி சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு ‘எலிக் கறி உண்ணும் போராட்டம்’ நடத்தப்படும் என்று தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம், வீரப்பூர் அருகே உள்ள அனியாப்பூரில் நேற்று நடைபெற்ற சங்கத்தின் ஒன்றிய ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அய்யாக்கண்ணு கூறியதாவது:
தண்ணீர் கிடைக்காமலும், வறட்சி காரணமாகவும் தமிழகம் முழுவதும் விவசாயம் முற்றிலும் அழிந்துவிட்டது. இது தொடர்பாக தமிழக வேளாண் துறைச் செயலர் மாநிலம் முழுவதும் நேரில் ஆய்வு செய்து, தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும்.
மேலும், வறட்சி நிவாரணமாக புன்செய் நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000, நன்செய் நிலங்களுக்கு ரூ.30,000 வீதம் நிவாரணம் வழங்குவதுடன், விவசாய கூலித் தொழிலாளர் குடும்பங் களுக்கு மாதந்தோறும் ரூ.15,000 வீதம் நிவாரணம் வழங்க வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற 15 நாட்களில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், விவசாயிகளைத் திரட்டி டிசம்பர் 15-ம் தேதி சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு, ‘எலிக் கறி உண்ணும் போராட்டம்’ நடத்தப்படும் என்றார்.