Published : 22 Nov 2022 03:57 PM
Last Updated : 22 Nov 2022 03:57 PM

“என் தரப்பு விளக்கம் கேட்கப்படவில்லை” - பாஜக தலைமை மீது காயத்ரி ரகுராம் காட்டம்

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த காயத்ரி ரகுராம்

சென்னை: "நான் பாஜகவுக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறியிருப்பது வருத்தமளிக்கிறது" என்று கட்சியிலிருந்து 6 மாத காலம் நீக்கப்பட்டுள்ள காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் காயத்ரி ரகுராம் கூறியது: "பாஜகவின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவராக இருந்ததால் இதுவரை மியான்மர், கம்போடியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 28 தமிழர்களை இருந்து மீட்டு கொண்டு வந்துள்ளேன். இதுபோன்ற விஷயங்கள் பலவற்றை நான் எனது சொந்த செலவிலேயே செய்துள்ளேன். அப்படியிருக்கும்போது, நான் பாஜகவுக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறியிருப்பது வருத்தமளிக்கிறது.

செல்வக்குமார் என்பவர் கட்சியில் இன்றைக்கு வந்து சேர்ந்த நபர், கிட்டத்தட்ட ஒரு 3 மாதத்திற்கு முன்பு கட்சியில் சேர்ந்தவர். கட்சியில் வந்த உடனே அறிவுசார் பிரிவின் துணைத் தலைவர் என்ற ஒரு பெரிய பொறுப்பு வாங்கினார். எனக்கு எதிராக, கொச்சையான ஒரு ட்வீட்க்கு லைக் போட்டிருக்கிறார். அதைப் பார்த்துவிட்டு நான் சும்மா இருக்கமாட்டேன். அவர் குறித்து கட்சியில் புகார் அளிப்பதற்கு முன்பாகவே என்னை நீக்கியுள்ளனர்.

செல்வக்குமார் குறித்து கட்சியில் புகார் அளிப்பது குறித்து தயாராகிக் கொண்டிருந்தோம். அதுதொடர்பாக விசாரணை நடத்தாமல், நோட்டீஸ் கொடுக்காமல் என்னை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்துள்ளனர். இந்த செல்வக்குமார் இதுபோல நடந்துகொள்வது முதல் முறையல்ல. இதற்கு முன் ஏற்கெனவே இதுபோல நடந்திருக்கிறார். எனவே ஆரம்பம் முதல் அவர் செய்த செயல்களை கட்சித் தலைமைக்கு கொண்டு செல்வதற்குள் சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. என் தரப்பு விளக்கம் கேட்கப்படவில்லை" என்று அவர் கூறினார்.

முன்னதாக, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார். ஆகவே, கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் காயத்ரி ரகுராமிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x