

சென்னை: பாஜக நிர்வாகிகள் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இது குறித்து விசாரணை நடத்த அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
பாஜகவின் சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் டெய்சி சரண் மற்றும் ஓபிசி பிரிவு மாநிலச் செயலர் சூர்யா சிவா ஆகியோருக்கு இடையில் நடந்த உரையாடல் தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்நிலையில் இது குறித்து விசாரணை நடத்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தமிழக பாஜகவின் சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் டெய்சி சரண் மற்றும் ஓபிசி பிரிவு மாநிலச் செயலர் சூர்யா சிவா ஆகியோருக்கு இடையில் நடந்த உரையாடல் ஒன்று இன்று காலை என் கவனத்திற்கு வந்தது. இந்த சம்பவத்தை விசாரித்து 7 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழு அறிக்கை சமர்பிக்கும் வரை, சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.