Published : 22 Nov 2022 11:45 AM
Last Updated : 22 Nov 2022 11:45 AM

தமிழறிஞர் ஔவை நடராசன் மறைவு: தலைவர்கள் இரங்கல் 

தமிழறிஞர் ஔவை நடராசன் | கோப்புப்படம்

சென்னை: 1992 முதல் 1995 வரை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், செம்மொழி தமிழ் உயராய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் பதவி வகித்த ஔவை நடராசன் (87) உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று (நவ.21) காலமானார். அவரது மறைவுக்கு தமிழக அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: "தமிழ் வளர்ச்சிக்கும், கல்விக்கும் மிகச் சிறந்த பங்காற்றியவர் அவ்வை நடராசன். நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை அவர் எழுதியிருக்கிறார். அரசின் சார்பிலும், அரசியல் கட்சிகளின் சார்பிலும் தமிழ் மொழி வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்ட பெரும்பான்மையான முன்னெடுப்புகளில் பங்களித்தவர் நடராசன்.

தமிழறிஞர் அவ்வை நடராசன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், கல்விச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாமக சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: "பேரறிஞர் அண்ணாவின் மீது அளவற்ற மதிப்பும், அன்பும், ஈடுபாடும் கொண்டிருந்த ஒளவை நடராசன் பேச்சுக் கலையில் அண்ணாவையே முன்மாதிரியாகக் கொண்டிருந்ததை பெருமையுடன் குறிப்பிடுவார்.

மேனாள் முதல்வர்களான முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர், மக்கள் திலகம் எம்ஜிஆர், செல்வி ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் தமிழ் மாநாடுகளை நடத்துவதிலும், தமிழ் வளர்ச்சிக்கு பல வகையிலும் பணியாற்றுவதிலும் முத்திரை பதித்த பண்பாளர் ஒளவை நடராசன் ஆவார்.

தமிழ் மொழிக்காவும், தமிழர் நலனுக்காகவும் தொண்டறம் தொடர்ந்து தமிழ் இமயமாக வாழ்ந்து நம் நெஞ்சில் நிறைந்தவர் ஒளவை நடராசன். அவரது மறைவால் துயரில் இருக்கக்கூடிய அவரின் குடும்ப உறவுகளுக்கும், தமிழ் நெஞ்சங்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூ. கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்: "புலிக்கு பிறந்தது பூனையாகாது" என்ற முதுமொழியின் இலக்கியமாக வாழ்ந்தவர். தமிழ்நாட்டின் சிறந்த கல்வியாளரான ஔவை நடராசன் உயர்கல்வியில் முதுமுனைவர் பட்டம் பெற்றவர்.

தமிழிலும், ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர். இரு மொழிகளிலும் ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். மிக நல்ல பேச்சாளர். தமிழாய்வு உலகில் பிரகாசித்து வந்த ஒரு சுடரொளி மறைந்து விட்டது. இது தமிழாய்வு உலகில் ஏற்பட்டிருக்கும் பேரிழப்பாகும் அன்னாரின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. சு.திருநாவுக்கரசர்: "முதுபெரும் தமிழறிஞர் அவ்வை நடராசன் தமிழ்தாயின் தவப்புதல்வர்களில் ஒருவர். மிகச் சிறந்த எழுத்தாளர். ஒப்பற்ற தமிழ் பேச்சாளர். தமிழ் இலக்கியங்களில் எல்லையற்ற ஈடுபாடும் ஆழமான அறிவும் நிறைந்தவர். தன் வனப்புமிகு பேச்சாற்றலால் மக்களை கட்டி போட்டவர் கவர்ந்தவர். அன்னாரின் மறைவு தமிழுக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் தமிழ் சான்றோர் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எனது அனுதாபத்தை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: "மூத்த தமிழறிஞர் ஔவொ நடராசன் அவர்களது மறைவு தமிழாராய்ச்சிப் பணிகளுக்கு பெரும் இழப்பு ஆகும். அவ்வை நடராசனின் தமிழ் மற்றும் கல்வி பணிகளை நான் அறிவேன். தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்கள், மருத்துவர் அய்யா ஆகியோருடன் நெருங்கி பழகியவர். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: முதுபெரும் தமிழறிஞர் பத்மஸ்ரீ முனைவர் ஒளவை நடராசன் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன். புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் நன்மதிப்பைப் பெற்றிருந்த .நடராசன் அவர்கள், ஆற்றிய தமிழ்ப் பணிகள் என்றும் நிலைத்திருக்கும்.அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: "தமிழறிஞர் அவ்வை நடராசன் 1975ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை துணை இயக்குநராகவும், 1984 ஆம் ஆண்டு முதல் 1992 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இல்லாமல் அரசுத் துறைச் செயலராக முதன் முதலில் நியமிக்கப்பட்டவர் அவ்வை நடராசன் என்ற பெருமைக்குரியவர்.

உலக நாடுகள் பலவற்றுக்கும் சென்று சொற்பொழிவுகள் நிகழ்த்தியவர். உடல்நிலை காரணமாகவும் வயது மூப்பு காரணமாகவும் உயிர்நீத்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயருற்றேன். அவரை பிரிந்து வாழும் அவரது குடும்பத்தினர்களுக்கும் உறவினர்களுக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x