Published : 22 Nov 2022 08:55 AM
Last Updated : 22 Nov 2022 08:55 AM

மின் கட்டண உயர்வுக்கு எதிராக கோவையில் நவ.25-ல் கதவடைப்பு, உண்ணாவிரதம்: தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவிப்பு

கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ‘போசியா’ கூட்டமைப் பின் நிர்வாகிகள். படம்: இல.ராஜகோபால்

கோவை: இரண்டு வகையான மின் கட்டண உயர்வை கைவிட வலியுறுத்தி, கோவையில் உள்ள 18 தொழில் அமைப்புகளை உள்ளடக்கிய ‘போசியா’ கூட்டமைப்பு சார்பில் நவம்பர் 25-ம் தேதி கோவையில் கதவடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.

‘போசியா’ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ், சிவசண்முககுமார் உள்ளிட்டோர் கோவையில் நேற்று செய்தியாளர் களிடம் கூறியதாவது: கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020-ல் தொடங்கி இன்று வரை மூலப்பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளால் தொழில் நிறுவனத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இச்சூழ்நிலையில் கருத்துக்கேட்பு கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்தபோதும் தமிழக அரசு மின் கட்டண உயர்வை அமல்படுத்தியுள்ளது.

குறு, சிறு நிறுவனங்கள் பயன்படுத்தி வரும் எல்டிசிடி பிரிவுக்கான (112 கேவி) மின் கட்டணத்தை 60 முதல் 70 சதவீதம் வரை உயர்த்தி உள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து 25 சதவீதமாக இருந்த உச்ச பயன்பாட்டு நேர மின் கட்டணம் 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. எல்டிசிடி பிரிவில் மாதாந்திர நிலைக்கட்டணம் 150 சதவீதத்துக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது. குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை உணர்ந்து உச்ச பயன்பாட்டு நேர மின் கட்டணத்தை அரசு முழுமையாக நீக்க வேண்டும்.

எல்டிசிடி பிரிவுக்கு முன்பு இருந்ததை போல நிலைக்கட்டணம் ரூ.35 மட்டும் வசூலிக்க வேண்டும். இவ்விரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் வரும் 25-ம் தேதி 20 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் ஒருநாள் கதவடைத்து, காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை டாடாபாத் பவர் ஹவுஸ் அருகே உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கட்டண உயர்வு மட்டும் தீர்வாகாது: கம்ப்ரசர் உற்பத்தியாளர்கள் கிருத்திகா, ரவீந்திரன், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் தொழிற்பேட்டை தலைவர் சுரேந்திரன், கணபதி தொழிற்சாலைகள் நலச்சங்கத்தின் நிர்வாகி ரமணன் உள்ளிட்டோர் கூறியதாவது:

குறு, சிறு தொழில் நிறுவனங்கள் பயன்படுத்தும் எல்டிசிடி பிரிவில் உச்ச பயன்பாட்டு நேர மின் கட்டணம் என்பதே இல்லை. உயர்அழுத்த மின்நுகர்வோருக்கு மட்டும் தான் உள்ளது. இந்த முறை உச்ச பயன்பாட்டு நேர மின்கட்டணம் புதிதாக அறிவிக்கப்பட்டு 25 சதவீதம் கூடுதல் கட்டண உயர்வுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை உடனடியாக கைவிட வேண்டும்.

உதாரணமாக, கடந்த அக்டோபர் 3-ம் தேதி 1,720 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்திய தொழில்முனைவோர் ரூ.16,148 கட்டணம் செலுத்திய நிலையில், இந்த மாதம் அதே அளவு யூனிட் பயன்படுத்தினால் ரூ.24,234 கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. குறு, சிறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுவது மொத்த தொழில் வளர்ச்சியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மின் வாரியத்தை லாபகரமாக இயக்க பல வழிகள் உள்ளன. அதைவிடுத்து கட்டண உயர்வை அமல்படுத்துவதால் மட்டும் தீர்வு கிடைக்காது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x