

சென்னை: ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு, இந்த மாதம் முதல் வாரம் 3 முட்டை, சத்துமாவு மற்றும் செறிவூட்டப்பட்ட பிஸ்கெட்கள் வழங்குவதற்கான அரசாணை வெளியிப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், அங்கன்வாடி குழந்தைகளுக்கு நவம்பர் மாதம் முதல் வாரம் 3 முட்டை, செறிவூட்டப்பட்ட பிஸ்கெட் ஆகியவை வழங்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாநில அளவில் வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் 2-வது கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
முதல்வரின் இந்த அறிவிப்பு தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் இயக்குநரின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு, 6 மாதம் முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு, 100 சதவீதம் ஊட்டச்சத்து அளிக்கும் வகையில், வறுக்கப்பட்ட கோதுமை மாவு, பார்லி மாவு கலந்த கேழ்வரகு மாவு, கொழுப்பு நிறைந்த சோயா மாவு, வெல்லம், வறுத்து அரைத்த நிலக்கடலை மாவு, வைட்டமின் மற்றும் மினரல் கலவை ஆகியவை சேர்த்து வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
அதேபோல், கர்ப்பிணி, குழந்தை பெற்ற பெண்களுக்கு, வறுத்த கோதுமை, கடலை பருப்பு, உளுந்து, வேர்க்கடலை மாவுகள், சுத்திகரிக்கப்பட்ட காய்கறி எண்ணெய், பார்லி கலந்த கேழ்வரகு மாவு, கொழுப்பு நிறைந்த சோயா மாவு, வெல்லம், வைட்டமின் மற்றும் மினரல் கலவை ஆகியவை இணைந்த கலவை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இவை இரண்டுக்கும் சத்துமாவு என பெயரிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த சத்துமாவுடன் ஏலக்காய், ஸ்ட்ராபெர்ரி, வென்னிலா, கோ கோ என இவற்றில் ஏதேனும் 2 வகை நறுமணத்துடன் 2 முதல் 6 வயது குழந்தைகளுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. செறிவூட்டப்பட்ட பிஸ்கெட்டை பொறுத்தவரை, வல்லுநர் குழு பரிந்துரைபடி, கோதுமை மாவு, மைதா, நிலக்கடலை துகள்கள், கேழ்வரகு மாவு, காய்கறி எண்ணெய், சர்க்கரை, வைட்டமின் மற்றும் மினரல்கள், பேக்கிங் பவுடர் ஆகியவை இணைந்த கலவையாக இருக்க வேண்டும்.
சத்துமாவு, பிஸ்கெட் மற்றும் முட்டையை பொறுத்தவரை, 6 மாதம் முதல் 1 வயதுடைய குழந்தைகளுக்கு 125 கிராம் சத்துமாவு, ஊட்டச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்ட 1 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு 125 கிராம் சத்துமாவு, 60 கிராம் பிஸ்கெட் வழங்க வேண்டும். 1 முதல் 2 வயதுடைய குழந்தைகளுக்கு 125 கிராம் சத்துமாவு மற்றும் வாரம் 3 முட்டை வழங்க வேண்டும்.
இதே வயதில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழ்நதைகளுக்கு 125 கிராம் சத்துமாவு, 60 கிராம் பிஸ்கெட் மற்றும் வாரம் 3 முட்டை வழங்க வேண்டும். 2 முதல் 3 வயதுள்ள குழந்தைகளுக்கு 50 கிராம் சத்துமாவு மற்றும் மதிய உணவு, ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் 50கிராம் சத்துமாவு, மதிய உணவு மற்றும் 30 கிராம் பிஸ்கெட், 3 முதல் 6 வயதுள்ள குழந்தைகளுக்கு 50 கிராம் சத்துமாவு மற்றும் மதிய உணவு, ஊட்டச்சத்து குறைபாடிருந்தால் 50 கிராம் சத்துமாவு, மதிய உணவு, 30 கிராம் பிஸ்கெட் வழங்கப்பட வேண்டும். கர்ப்பிணி, குழந்தை பெற்ற பெண்களுக்கு 150 கிராம் சத்துமாவு வழங்கப்பட வேண்டும். இது ஏற்கெனவே 165 கிராமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
3 முட்டைகள்: மதிய உணவை பொறுத்தவரை, கலவை சாதம், வாரம் 3 முட்டை, கறுப்பு கொண்டைக்கடலை அல்லது பச்சைப்பயறு செவ்வாய் கிழமையிலும், அவித்த உருளைக்கிழங்கு வெள்ளிக்கிழமையும் வழங்கப்பட வேண்டும். மேலும், 6மாதம் முதல் 2 வயது வரையிலான குழந்தைகள், கர்ப்பிணி, குழந்தை பெற்ற பெண்களுக்கு 500 கிராம் எடையுள்ள சத்துமாவு பாக்கெட்கள் வழங்க அனுமதிக்கப்படுகிறது. அங்கன்வாடியில் 1 முதல் 2 வயதுள்ள குழந்தைகளுக்கு வாரம் கூடுதலாக 2 முட்டை வழங்குவதால் ஏற்படும் செலவினம் மதிய உணவு திட்டத்தில் சேர்க்கப்படுகிறது. இந்த செலவினங்கள் ரூ.642 கோடிக்குள் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது