

புதிய திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டதாக, கோவையைச் சேர்ந்த 2 பேரை கேரள போலீஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த 6 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
திரைத்துறைக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக புதிய திரைப்படங்களை சமூக விரோத கும்பல்கள் இணையதளத்தில் உடனுக்குடன் வெளியிட்டு வருகின்றன. சமீபத்தில் கபாலி திரைப்பட வெளியீட்டின்போது இந்த பிரச்சினை பெரிய அளவில் பேசப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பல இணையதளங்களுக்கு நீதிமன்றம் தடை விதித்தது. ஆனாலும், வேறு வேறு இணையதளங்களில் படத்தை வெளியிட்டு திரைத்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றனர். தமிழ் மட்டுமல்லாமல் மலையாள, தெலுங்கு, இந்தி என ஒட்டுமொத்த திரைத்துறையும் இப்பிரச்சினையில் சிக்கி கோடிக்கணக்கான ரூபாய் இழப்பை சந்தித்து வருகின்றன.
இந்நிலையில், மோகன்லால் நடிப்பில் கேரளாவில் சமீபத்தில் வெளியான புலிமுருகன் திரைப்படம், வெளியான தினமே இணையதளம் ஒன்றிலும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. படக்குழுவினர் கொடுத்த புகாரின் பேரில், கேரள திருட்டு விசிடி தடுப்புப் போலீஸார் விசாரித்தனர். ஆனால் அந்த இணையதளத்தின் உரிமையாளர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது.
அந்த இணையதளம் தமிழகத்தில் இருந்து இயக்கப்படுவது, அதில் கோவையைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பதும் போலீஸாருக்கு தெரியவந்தது. அதன் அடிப்படையில் கோவை பீளமேட்டைச் சேர்ந்த சதீஷ் (24), புவனேஷ் (34) இருவரையும் கேரள போலீஸார் கைது செய்துள்ளனர். தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளத்தில் திரைப்படத்தை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
1000 கோடி இழப்பு
கேரள திருட்டு விசிடி தடுப்புப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் எம்.இக்பால் தலைமையிலான போலீஸார் வழக்கை விசாரிக்கின்றனர். வழக்கு விசாரணை குறித்து எம்.இக்பால் கூறும்போது, ‘தமிழ்ராக்கர்ஸ் என்ற பெயரில் எழுத்துகளை மட்டும் அவ்வப்போது மாற்றி இயக்கியது தெரியவந்தது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் கோவை, சென்னை உட்பட 4 இடங்களில் ஆய்வு செய்தோம். அதில் 2 பேர் கைதாகினர். அவர்களிடம் இருந்து 40 கணினிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் பின்னணியில் உள்ள 6 பேரைத் தேடி வருகிறோம். ஒட்டுமொத்த இந்திய திரைத்துறைக்குமே தமிழ்ராக்கர்ஸ் உள்ளிட்ட சில இணையதளங்கள் சவாலாக இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக ஆண்டுக்கு ரூ.1000 கோடி அளவில் இழப்பு ஏற்படுகிறது. தமிழகத்தில் இப்பிரச்சினை குறித்து புகார்கள் அதிகமாக இருந்தாலும், நடவடிக்கைகள் குறைவாகவே இருக்கின்றன. இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும்’ என்றார்.
கோவை போலீஸாரிடம் கேட்டபோது, ‘திரைப்படங்களை வெளியிடும் இதுபோன்ற இணையதளங்களுக்கு பார்வையாளர்கள் அதிகம். எனவே விளம்பரங்களும் அதிகமாக கிடைக்கின்றன. ஒரு தளத்தை தடை செய்தால், வேறு பெயரில் ஒரு தளத்தைத் தொடங்குகிறார்கள். ‘ஐபி ஸ்பூசிங்’ என்ற தொழில்நுட்பம் மூலம் எங்கிருந்து இயக்கப்படுகிறது என்பதையும் மறைக்கின்றனர். இதனால் கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கிறது’ என்றனர்