Published : 22 Nov 2022 04:15 AM
Last Updated : 22 Nov 2022 04:15 AM
தருமபுரி: கேரள மாநிலத்தில் நரபலியாக் கப்பட்ட தருமபுரி மாவட்ட பெண்ணின் உடல் நேற்று முன் தினம் மாலை சொந்த கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் எர்ரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மா (56). வறுமை காரணமாக வேலைக்காக இவர் கேரள மாநிலத்தில் தங்கியிருந்தார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் மாயமான பத்மா, பத்தனம்திட்டா பகுதியில் பிற்போக்கு சிந்தனை கொண்ட கும்பலால் நரபலியாக்கப்பட்டு தோட்டத்தில் புதைக்கப்பட்டார்.
அதற்கு முன்பாகவும் மாற்றொரு பெண் இதேபோல கொலை செய்யப்பட்டார். இந்த தகவலை அறிந்து அம்மாநில போலீஸார் கொலையாளிகளை கைது செய்தனர். மேலும், அவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் இரு பெண்களின் உடல்களும் தோண்டியெடுக்கப்பட்டன. அவற்றை டிஎன்ஏ சோதனைக்கு போலீஸார் உட்படுத்தினர்.
எனவே, பத்மாவின் குடும்பத்தாரிடம் அவரது உடலை ஒப்படைப்பதில் தாமதம் நிலவி வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை கேரள மாநில போலீஸார் பத்மாவின் உடலை அவரது உறவினர்களிடம் வழங்கினர். பின்னர் அந்த உடல், அன்று மாலை தருமபுரி மாவட்டம் நாகாவதி அணை அருகிலுள்ள எர்ரப்பட்டி கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டது. சொந்த கிராமத்தில் வழக்கமான சடங்குகளுக்கு பின்னர் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT