Published : 22 Nov 2022 07:06 AM
Last Updated : 22 Nov 2022 07:06 AM
திருவள்ளூர்: நீர்வரத்து குறைவால் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 100 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை, திருவள்ளூர் மாவட்டத்தில் இம்மாத தொடக்கத்தில் கன மழை, மிதமான மழை என, கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், கடந்த 15-ம் தேதி முதல், நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் மழை பெய்யவில்லை.
ஆகவே, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து புழல் ஏரிக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. அவ்வாறு வரும் நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி, விநாடிக்கு 160 கனஅடியாக இருந்தது. இதனால், 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு மற்றும் 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் 2,530 மில்லியன் கனஅடி நீர் இருப்பும், 17.63 அடி நீர்மட்டமும் உள்ளது.
ஆகவே, புழல் ஏரியிலிருந்து வெளியேற்றப்பட்டு வரும் உபரிநீரின் அளவு நேற்று காலை 8 மணியளவில், விநாடிக்கு 100 கனஅடியாக குறைக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சென்னைக்கு குடிநீர் தரும் மற்ற ஏரிகளுக்கும் நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி, பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 400 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், 3,231 மில்லியன் கனஅடி கொள்ளளவு, 35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியின் நீர்இருப்பு, 1,936 மில்லியன் கனஅடியாகவும், நீர்மட்டம் 30.82 அடியாகவும் உள்ளது.
1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு, 18.86 அடி உயரம் கொண்ட சோழவரம் ஏரிக்கு விநாடிக்கு 10 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. எனவே, சோழவரம் ஏரியின் நீர் இருப்பு 418 மில்லியன் கனஅடியாகவும், நீர்மட்டம் 10.37 அடியாகவும் இருக்கிறது.
500 மில்லியன் கனஅடி கொள்ளளவு, 36.61 அடி உயரம் உள்ள கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை ஏரிக்கு விநாடிக்கு 10 கனஅடி நீர் வருவதால், அந்த ஏரி முழுமையாக நிரம்பி, விநாடிக்கு 10 கனஅடி உபரிநீர் வெளியேறி வருகிறது என நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செம்பரம்பாக்கம் ஏரி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை இல்லாததால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்தும் திறந்துவிடப்படும் நீரின் அளவு நேற்று விநாடிக்கு 100 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஏரியின் நீர்மட்ட உயரம் 19.61 அடியாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்தாலும் 23 அடி வரை ஏரியில் நீரை தேக்கி வைக்கலாம். ஏரியின் நீர்மட்டம் குறைந்ததால் உபரிநீர் திறக்கும் அளவு குறைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT