செங்கல்பட்டு | பொதுமக்கள் அச்சம்: மீண்டும் சிறுத்தைப் புலி நடமாட்டமா? - கேமரா பொருத்தி வனத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு

செங்கல்பட்டு அருகே மர்ம விலங்கால் கால்நடைகள் பலியானதை தொடர்ந்து விலங்கின் நடமாட்டத்தை கண்காணிக்க கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறை அதிகாரிகள்.
செங்கல்பட்டு அருகே மர்ம விலங்கால் கால்நடைகள் பலியானதை தொடர்ந்து விலங்கின் நடமாட்டத்தை கண்காணிக்க கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறை அதிகாரிகள்.
Updated on
1 min read

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே கன்றுக்குட்டிகள் மர்ம விலங்கால் கொல்லப்பட்டுள்ளதால், சிறுத்தைப் புலியின் நடமாட்டமாக இருக்குமோ என கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் கிராமத்தில் கேமரா பொருத்தி வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு அடுத்த தென்மேல்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் வளர்த்து வரும் கன்றுக்குட்டி கடந்த இரு தினங்களுக்கு முன்பு மர்ம விலங்கால் கடிபட்டு உயிரிழந்தது. நேற்றும் ஒரு கன்றுக்குட்டி இதேபோல் பலியானது. இதனால் தென்மேல்பாக்கம் கிராம மக்கள் அச்சமடைந்தனர்.

இதேபோல் கடந்த 18-ம் தேதி செங்கல்பட்டு அருகே அஞ்சூர் கிராமத்தில் புதுப்பேட்டையைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவரின் பசுமாடும் நள்ளிரவில் வாய் மற்றும் தொடை பகுதியில் கடிபட்ட நிலையில் இறந்து கிடந்தது. தற்போது தென்மேல்பாக்கத்தில் இதே பாணியில் கன்றுக்குட்டி ஒன்றும் பலியாகியுள்ளது.

கன்றுக்குட்டிகள் உயிரிழந்த இடம் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். இந்த வழியாகத்தான் பள்ளிகளுக்கு மாணவர்கள் சென்று வருகின்றனர். மேலும் சிறுத்தைப் புலியின் கால் தடமும் கிடைத்துள்ளதாக தெரிகிறது. இதனால் பீதியடைந்த கிராம மக்கள், கேமரா பொருத்தி மர்ம விலங்கு எது என கண்டுபிடிக்க வேண்டும் என்றும் மேலும் சிறுத்தைபுலி நடமாட்டம் உள்ளதா என்பது குறித்தும் கண்காணித்து பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன்பு செங்கல்பட்டு அருகே அஞ்சூர் மற்றும் ஈச்சங்கரணை கிராமங்களில் சிறுத்தைப் புலி நடமாட்டம் அதிகமாக இருந்தது அப்போது நாய், மற்றும் மாடுகளை கடித்து கொன்றது. அதேபோல் தற்போதும் சிறுத்தை புலியின் கால் தடங்கள் இருப்பதால் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த் துறையினர் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை, வனத் துறை அதிகாரிகள் தென்மேல்பாக்கம் கிராமத்தில் நேற்று முகாமிட்டனர். உயிரிழந்த கன்றுக்குட்டிகள் எப்படி இறந்தது, எந்த விலங்கு கடித்தது என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதாக தெரியவில்லை. சத்தங்களும் ஏதும் கேட்கவில்லை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். அஞ்சூர் மற்றும் தென்மேல்பாக்கம் கிராமங்களில் கன்றுக்குட்டி கடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது. மாட்டின் எந்த ஒரு பாகத்தையும் அந்த விலங்கு கொண்டு செல்லவில்லை. அதனால் சிறுத்தைப் புலி நடமாட்டமாக இருக்க வாய்ப்பு இல்லை. மர்ம விலங்கால் மாடுகள் கடிக்கப்பட்டுள்ளன. என்ன விலங்காக இருக்கும் என்பதை குறித்து தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தப் பகுதியில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு செய்து வருகிறோம். விைவில் இதற்கு தீர்வு காணப்படும். இது குறித்து தென்மேல்பாக்கம் கிராம பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in