

சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் நேற்று வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
சேலம், செரிரோட்டில் உள்ள சேலம் மத்திய கூட்டுறவு வங்கிக்கு சொந்தமான நான்கு அடுக்கு மாடி கட்டிடம் உள்ளது. தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக அதிமுக பிரமுகரும், சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.இளங்கோவன் பொறுப்பு வகித்து வருகிறார்.
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ் சேலம் மாவட்டம் முழுவதும் 64 வங்கிகள் இயங்கி வருகின்றன. சென்னையில் இருந்து நேற்று மாலை சேலம் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த வங்கியின் நான்காவது தளத்தில் உள்ள இளங்கோவன் அலுவலகம் மற்றும் வங்கியில் வரவு செலவு தொடர்பான ஆவணங்கள் மற்றும் வங்கியில் பணப் பரிவர்த்தனை செய்தது சம்பந்தமான ஆவணங்கள் உள்ளிட்ட ரசீதுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வரு கின்றனர்.
நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 9 மணிக்கு மேலும் தொடர்ந்தது. இச்சோதனையால் வங்கி அலுவலர்கள் மற்றும் அதிமுக பிரமுகர்கள் பலரும் கலக்கத்தில் உள்ளனர்.