

மதுரை: நாட்டில் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற சட்டப்பிரிவை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் குன்னூரைச் சேர்ந்தவர் சீனிவாசன். திமுக சொத்து பாதுகாப்புக் குழு உறுப் பினராக உள்ளார். இவர் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: நாட்டில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய, முன்னேறிய வகுப்பினருக்கு அரசு வேலை வாய்ப்பு மற்றும் உயர் கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் ரூ.8 லட்சத்துக்குள் ஆண்டு வருமானம், 5 ஏக் கருக்குள் விவசாய நிலம், நகர் பகுதியில் ஆயிரம் சதுரடிக்குள் இடம், கிராமப்புறங்களில் நூறு சதுர மீட்டருக்குள் குடியிருப்பில் இருப்பவர்கள் பொருளாதார ரீதியில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டைப் பெற முடியும்.
இந்தச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்பு சட்டத் தின் 103-வது சட்டத் திருத்தம் செல்லும் என 7.11.2022-ல் தீர்ப்பளித்துள்ளது.
மத்திய வருமான வரிச் சட்டத்தில் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கும் அதிகமாக உள்ள அனைவரும் வருமான வரி செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அதன்படி ஆண்டுக்கு ரூ.2.50 லட்சம் வருமானம் பெறுபவர்கள் அனை வரும் பொருளாதார ரீதியில் முன்னேறியவர்கள் எனக் கூறப் பட்டுள்ளது. அப்படியிருக்கும் போது பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு பெறுவதற்கான அதிகபட்ச வருமான வரம்பு ரூ.8 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது சட்டவிரோதம்.
இது மக்களைப் பொருளாதார ரீதியில் பாகுபாடு பார்ப்பது ஆகும். எனவே, ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டும் என மத்திய வருமான வரி சட்டப்பிரிவை செல்லாது, அரசி யலமைப்புச் சட்டத்துக்கு விரோ தமானது என அறிவிக்கவும், அதுவரை வருமான வரிச் சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகா தேவன், ஜெ.சத்யநாராயணபிரசாத் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. பின்னர், மனு தொடர்பாக மத்திய சட்டத் துறைச் செயலர், நிதித் துறைச் செயலர், மத்திய பொதுத் துறைச் செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.