

தென்காசி: தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள முத்துமாலைபுரத்தை சேர்ந்த முப்புடாதி என்பவரது மனைவி மகேஸ்வரி. இவர், சில்லரைபுரவு ஊராட்சி கவுன்சிலராக உள்ளார். இவர், நேற்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அவரை தடுத்து நிறுத்தி, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். தனது பதவியை ராஜினாமா செய்யக் கூறி ஊராட்சித் தலைவர் நெருக்கடி கொடுப்பதாகவும், அதனால் தீக்குளிக்க முயன்றதாகவும் போலீஸாரிடம் கூறியுள்ளார். பொது இடத்தில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக நடந்துகொண்டதால் போலீஸார் வழக்கு பதிவு செய்து, மகேஸ்வரியை கைது செய்தனர்.