Published : 22 Nov 2022 04:45 AM
Last Updated : 22 Nov 2022 04:45 AM

தென்காசியில் சுற்றித் திரிந்த மனநலம் பாதித்த டெல்லி பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

தென்காசி: தென்காசி பேருந்து நிலையப் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சுற்றித் திரிந்தார். இது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ் உத்தரவையடுத்து தென்காசி காவல்துறையினர் உதவியுடன் அந்த பெண் மீட்கப்பட்டு வடகரையில் உள்ள மனநல அன்பு இல்லம் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு காப்பக பொறுப்பாளர் ராஜேஷ் வலலும்கல் மேற்பார்வையில் உணவு, உடை அளித்து ஆற்றுப்படுத்துதல் அளிக்கப்பட்டது.

டெல்லியை சேர்ந்தவர்: மேலும், தென்காசி அரசு தமைமை மருத்துவமனையில் மனநல சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர், தனது முன்னாள் கணவர் மருத்துவ பிரதிநிதியாக வேலை பார்ப்பதாக கூறினார். வேறு எந்த விவரங்களையும் கூற தெரியவில்லை. இதையடுத்து, மனநல மருத்துவர் நிர்மல் டெல்லியில் உள்ள அந்த மருந்து நிறுவன அதிகாரிகளை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலை குறித்து விளக்கினார்.

இதில், மனநிலை பாதிக்கப்பட்ட பெண் டெல்லியைச் சேர்ந்த ரூபி என்பதும், செவிலியர் படிப்பு முடித்துள்ள இவர், திருவனந்தபுரத்துக்கு நேர்முகத் தேர்வுக்காக வந்ததும், அங்கு, தனது சான்றிதழ்கள், உடைமைகள் தொலைந்து போனதால் மனநிலை பாதிக்கப்பட்டு தென்காசிக்கு வந்ததும் தெரியவந்தது. ரூபியின் சகோதரி வீடியோ அழைப்பு மூலம் ரூபியிடம் பேசினார். ரூபியை காணாமல் அவரது குழந்தைகளும், குடும்பத்தினரும் சோகத்தில் இருப்பதாகவும், விரைவில் காப்பகத்துக்கு வந்து அவரை அழைத்துச் செல்வதாகவும் உறுதியளித்தார்.

குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு: இதையடுத்து, நேற்று காலையில் ரயில் மூலம் ரூபியின் குடும்பத்தினர் தென்காசிக்கு வந்தனர். உறவினர்களை பார்த்த மகிழ்ச்சியில் அவர்களை ரூபி கட்டியணைத்து கண்ணீர் வடித்தார். தென்காசி அரசு மருத்துவமனை வளாகத்தில் நலப்பணிகள் இணை இயக்குநர் பிரேமலதா முன்னிலையில் ரூபி அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மேலும், ஒரு மாதத்துக்கான மனநல மாத்திரைகளை வழங்கி, தொடர் சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறு ஆலோசனை கூறினர். அப்போது மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின், உறைவிட மருத்துவர் ராஜேஷ், மனநல மருத்துவர் நிர்மல், காப்பக நிர்வாகிகள் உடனிருந்தனர். ரூபியும் அவரது உறவினர்களும் உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றி கூறி புறப்பட்டுச் சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x