Published : 22 Nov 2022 01:34 AM
Last Updated : 22 Nov 2022 01:34 AM

'தமிழ்த்துறையினருக்கு பேரிழப்பு' - ஔவை நடராசன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

சென்னை: 1992 முதல் 1995 வரை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், செம்மொழி தமிழ் உயராய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் பதவி வகித்த ஔவை நடராசன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 87.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஔவை நடராசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "சிறந்த தமிழறிஞர் ஔவை நடராசன் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்திய செய்தி அறிந்து மிகவும் வேதனையுற்றேன். ஔவை நடராசன் ‘உரைவேந்தர்’ ஔவை துரைசாமி அவர்களின் மகனாகப் பிறந்து, தந்தையைப் போலவே தமிழிலக்கியத்தில் நாட்டம் கொண்டு கல்லூரிகளில் தமிழைப் பயிற்றுவித்தவர். தமிழில் இவருக்கிருந்த ஆழங்காற்பட்ட புலமையால், தமிழ் வளர்ச்சித் துறையின் செயலர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர், சென்னை பாரத் பல்கலைக்கழக வேந்தர் உள்ளிட்ட பல பொறுப்புகள் இவரைத் தேடி வந்தன.

தொல்காப்பியம், சங்க இலக்கியம், கம்பராமாயணம் எனத் தமிழின் பெரும் இலக்கண இலக்கியங்களைப் பற்றி இவர் ஆற்றிய உரைகளால் கவரப்படாத தமிழார்வலர்கள் இருக்க முடியாது. தமது பேச்சாற்றலால் உவமைக் கவிஞர் சுரதா அவர்களாலேயே ‘பாதி அண்ணா’ எனப் பாராட்டப்பட்டவர்.

ஔவை நடராசன் கலைஞர்மீது மிகுந்த பற்றும் மரியாதையும் கொண்டிருந்தவர். எண்ணற்ற நூல்களையும், பல நூறு மாணாக்கர்களையும் நம்மிடம் விட்டுச் சென்றுள்ள பெருந்தகை ஔவை நடராசனின் மறைவு தமிழ்த்துறையினர்க்கும், கல்விப்புலத்தார்க்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தார், தமிழறிஞர் பெருமக்கள் மற்றும் மாணவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x