என்எல்சி நிலம் கையகப்படுத்தும் விவகாரம்: முதல்வர் தலையிட திருமாவளவன் வலியுறுத்தல்

திருமாவளவன் | கோப்புப்படம்
திருமாவளவன் | கோப்புப்படம்
Updated on
2 min read

சென்னை: "மத்திய அரசு நிறுவனமான என்எல்சிக்கு தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்ட ஆட்சியர் நிர்வாகம்தான் மேற்கொள்கிறது. நிலம் கையகப்படுத்தும் பணிகளை தமிழக அரசு செய்வதால் தமிழக முதல்வர் இதில் தலையிட வேண்டிய தேவை இருக்கிறது" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் ஆகியோர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது திருமாவளவன் கூறியது: "என்எல்சி சுரங்கம் ஒன்று மற்றும் இரண்டு ஆகிய இரண்டு சுரங்கங்களுக்கு நிலத்தைக் கையகப்படுத்த என்எல்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஏறத்தாழ 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள், நிலங்களை பறிகொடுக்கும் நிலையில் உள்ளனர்.

இந்த நிலங்களை கையகப்படுத்துகிற என்எல்சி நிர்வாகம், கடந்த காலங்களில் நிலம் வழங்கிய மக்களை ஏமாற்றியிருக்கிறது. அந்த நிர்வாகம் வாக்குறுதி அளித்தப்படி இழப்பீடும் வழங்கவில்லை, வேலைவாய்ப்பும் வழங்காமல் அவர்களை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது. தற்போது அதே என்எல்சி நிர்வாகம் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள இருக்கும் சூழலில், நிலம் கையகப்பட்டுத்துகின்றபோது, இழப்பீடு மற்றும் மறுகட்டமைப்பை அளிப்பதற்கான விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று பாதிப்பிற்குள்ளாகும் மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இதுதொடர்பாக ஆய்வு செய்வதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்க வேண்டும். அந்தக் குழு முழுமையாக ஆய்வு நடத்தி, ஒரு ஏக்கருக்கு எவ்வளவு இழப்பீடு வழங்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைக்கும் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும். 2000-ம் ஆண்டிலிருந்து நிலம் வழங்கிய மக்கள், நிலம் வழங்கவுள்ள மக்கள் அனைவருக்கும் பாகுபாடில்லாமல் இழப்பீடு வழங்குவதற்கு உரிய தகவல்களை திரட்டி தர வேண்டும். குழுவின் அறிக்கையின் அடிப்படையில் இழப்பீடு தர வேண்டும்.

ஏற்கெனவே நிர்வாகம் அளித்த வாக்குறுதியை மக்கள் ஏற்கவில்லை. நிலத்தை கொடுப்பதால், வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவதால், வீட்டுக்கு ஒருவருக்கு கட்டாயம் வேலைவாய்ப்பும், ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று மக்களின் முதன்மையான கோரிக்கையாக முன்வைக்கின்றனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி விசிக, தவாக, இடதுசாரிகள் இன்னும் ஆதரவாக இருக்கக்கூடிய தோழமை கட்சிகளை ஒருங்கிணைத்து விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். ஆர்ப்பாட்டத்திற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

தமிழக முதல்வர் இதில் தலையிட வேண்டும். ஏனெனில், மாவட்ட ஆட்சித் தலைவர்தான் நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை மேற்கொள்கிறார். மத்திய அரசு நிறுவனமான என்எல்சிக்கு தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்ட ஆட்சியர் நிர்வாகம்தான் மேற்கொள்கிறது. நிலம் கையகப்படுத்தும் பணிகளை தமிழக அரசு செய்வதால், இதில் தமிழக முதல்வருக்கும் கணிசமான பங்கு இருக்கிறது. எனவே அவர் தலையிட வேண்டிய தேவை இருக்கிறது. எனவே நாங்கள் அனைவரும் இணைந்து முதல்வரை நேரில் சந்தித்து, முதல்வரின் கவனத்துக்கு இந்த விவகாரத்தை கொண்டு செல்வோம்" என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in