

திருவண்ணாமலை அண்ணாமலை யார் கோயிலில் உள்ள தங்கக் கொடிமரத்தில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது.
திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த மாதம் 30-ம் தேதி இரவு கார்த் திகை தீபத் திருவிழா தொடங்கி யது. பின்னர் பிடாரி அம்மன் உற்சவம் டிசம்பர் 1-ம் தேதியும், விநாயகர் உற்சவம் 2-ம் தேதியும் நடைபெற்றது. இதையடுத்து, அண்ணாமலையார் கோயிலில் 63 அடி உயரம் உள்ள தங்கக் கொடிமரத்தில் நேற்று காலை கொடியேற்றப்பட்டது.
இந்த விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், ஆட்சி யர் பிரசாந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி, கோயில் இணை ஆணையர் ஹரிபிரியா உட்பட பல்லா யிரக்கணக்கான பக்தர்கள் பங் கேற்று தரிசனம் செய்தனர்.
இதையடுத்து, 10 நாட்கள் நடக்கும் உற்சவம் ஆரம்பமானது. நேற்று காலை கண்ணாடி விமானத்திலும், இரவு மூஷிகம், மயில், வெள்ளி அதிகார நந்தி, ஹம்சம், சிம்ம வாகனத்திலும் பஞ்சமூர்த்திகள் மாடவீதியுலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக, அண்ணாமலையார் கோயிலில் 12-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்படும்.