

அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் தேர்தல் பணிகளை பார்வையிட துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்கா, இயக்குநர் ஜெனரல் (செலவினம்) திலீப் சர்மா ஆகியோர் இன்று வரவுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் தேர்தல் பணிகளை பார்வையிடுவதற்காக துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்கா மற்றும் தேர்தல் செலவினம் தொடர்பான இயக்குநர் ஜெனரல் திலீப் சர்மா ஆகியோர் நாளை (இன்று) தமிழகம் வருகின்றனர். இவர்கள், புதுச்சேரியிலும் ஆய்வு மேற்கொள்கின்றனர். தமிழகத்தில் நாளை முதல் 11-ம் தேதி வரை 3 தொகுதிகளிலும் பார்வையாளர்கள், மாவட்ட ஆட்சியர், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினருடன் ஆலோசனை நடத்துகின்றனர். அவர்களுடன் நானும் செல்கிறேன்.
தேர்தல் நடக்கும் 3 தொகுதிகளுக்கும் சேர்த்து ஒரே காவல்துறை பார்வையாளராக சஞ்சீவ் ரஞ்சன் ஓஜா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 2 நாட்களில் தமிழகம் வருவார். பாதுகாப்புப் பணிக்காக வந்துள்ள துணை ராணுவப் படையினர், தற்போது பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினருடன் இணைந்து பணியாற்றுவர். வாக்குப்பதிவுக்கு 2, 3 நாட்களுக்கு முன்பு, பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக் குழுக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும். கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்படும்.
தேர்தல் முறைகேடுகள் தொடர் பாக இதுவரை புகார்கள் எதுவும் வரவில்லை. ஆனால், வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படவில்லை என திருப்பரங் குன்றத்தில் 2, அரவக்குறிச்சி, தஞ்சையில் தலா ஒன்று என மொத்தம் 4 புகார்கள் வந்துள்ளன.
திருப்பரங்குன்றம் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக தனியார் தொலைக்காட்சியில் வந்த செய்தி தொடர்பாக மதுரை ஆட்சியர் விசாரணை நடத்தி அறிக்கை அளித்துள்ளார். இந்தச் சம்பவத்தில், திமுக வேட்பாளர் வந்தபோது பலர் ஆரத்தி எடுத்துள்ளனர். அவர் சென்ற பிறகு, சிலர் வாகனத்தில் வந்து அங்கிருந்தவர்களுக்கு பணம் கொடுத்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பகுதி உதவி தேர்தல் அதிகாரி அளித்த புகாரின்பேரில் ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.