

சென்னை: தமிழகத்தில் முற்றும் கோஷ்டி மோதல் காரணமாக மூத்த காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி சென்றுள்ளனர். சோனியா காந்தி மற்றும் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அவர்கள் இன்று சந்திக்கின்றனர். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பது, 2024 மக்களவை தேர்தலுக்கு தயாராவது குறித்து ஆலோசிக்கும் வகையில் மாவட்டத் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15-ம் தேதி நடந்தது.
இதில் பங்கேற்க வந்த கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியை திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள் 400-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். மாவட்டத் தலைவர் கேபிகே ஜெயக்குமாரை நீக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
கூட்டம் முடிந்து காரில் புறப்பட்டபோதும், அழகிரியை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். நாங்குநேரி எம்எல்ஏவும், கட்சியின் மாநில பொருளாளருமான ரூபி மனோகரனின் தூண்டுதல் காரணமாகவே இவர்கள் செயல்படுவதாக கூறி, அழகிரி ஆதரவாளரும், மாநில எஸ்.சி. அணி தலைவருமான ரஞ்சன்குமார் தரப்பினர், முற்றுகையில் ஈடுபட்டவர்களை உருட்டுக்கட்டை யால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, 16-ம் தேதி மாவட்டத் தலைவர்கள் 62 பேர்கூடி, ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுக்குமாறு தீர்மானம் நிறைவேற்றி, ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமியிடம் வழங்கினார்.
அந்த தீர்மானம் தொடர்பாக கட்சியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தேசிய செயலாளர் வல்ல பிரசாத் தலைமையில், மாநில தலைவர் அழகிரி, முன்னாள் தலைவர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன், கே.வீ.தங்கபாலு, கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசர், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் முன்னிலையில் ஆலோசனை நடைபெற்றது. ரூபி மனோகரனை ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு அழைக்க இதில் முடிவு செய்யப்பட்டது.
அதற்கு முன்னாள் தலைவர்களும் செல்வப்பெருந்தகையும் எதிர்ப்பு தெரிவித்து, “காயமடைந்தவர்கள் காங்கிரஸ் தொண்டர்கள். குறைகளை சொல் வதற்காக வந்தவர்களிடம் குறைகளை கேட்கவில்லை. அவர்கள் தாக்கப்பட்டதற்கும் நியாயம் வேண்டும். தாக்கியவர்களை விசாரிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து, ரூபி மனோகரன், ரஞ்சன்குமார் ஆகிய இருவரும் வரும் 24-ம் தேதி ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இக்கூட்டத்தின்போது, விரும்பத்தகாத சில வார்த்தைகளை அழகிரி கூறியது, முன்னாள் தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி யதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனியார் ஓட்டலில் அவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்நிலையில், திருநாவுக்கரசர் தவிர்த்து மற்ற 4 பேரும் நேற்று காலை டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றனர். திருநாவுக்கரசர் மற்றும் அழகிரிக்கு எதிரான எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வகிகளும் இன்று டெல்லி செல் உள்ளதாக கூறப்படுகிறது.
அங்கு சோனியா காந்தி, கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரை சந்தித்து, அழகிரியை தலைவர் பதவியில் இருந்து நீக்குமாறும், புதிய தலைவரை நியமிக்குமாறும் வலியுறுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, கட்சி விதிகளின்படி தலைவர் பதவியில் 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள அழகிரியை மாற்ற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் தலைவர் பதவியை பிடிப்பதில் மூத்த நிர்வாகிகள் மத்தியில் ஆர்வமும், போட்டியும் அதிகரித்துள்ளது.
தேசிய செயலாளர் சிடி.மெய்யப்பன், கிருஷ்ணகிரி எம்.பி.செல்லக்குமார் ஆகியோருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. கட்சியில் இளம் தலைவர்களை அதிகம் சேர்க்கும் விதமாக, முன்னாள் எம்.பி.யான பெ.விஸ்வநாதன், கரூர் எம்.பி.ஜோதிமணி ஆகியோரை நியமிக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.கட்சி விதிகளின்படி, தலைவர் பதவியில் 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள அழகிரியை மாற்ற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது