மின் - அலுவலகம் திட்டத்தில் 2 லட்சம் கோப்புகள்: தமிழகத்தில் மின்னணுமயம்

மின் - அலுவலகம் திட்டத்தில் 2 லட்சம் கோப்புகள்: தமிழகத்தில் மின்னணுமயம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் மின்-அலுவலகம் திட்டத்தில் 2 லட்சம் அரசு கோப்புகள் மின்னணு மயமாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசுத் துறைகளில் காகிதப் பயன்பாட்டைக் குறைக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் தமிழ்நாடு மின்னாளுமை முகமை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, சட்டப்பேரவை செயலகத்தின் பல்வேறு ஆவணங்கள், கோப்புகள் கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன. ‘காகிதமில்லா சட்டப்பேரவை’ திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதன்மூலம் காகிதச் செலவை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்களிலும் காகித கோப்புகளுக்கு பதில், மின்னணு கோப்புகளைத் தயாரிக்கும் நடைமுறை ‘மின்-அலுவலகம்’ திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம், அரசு அலுவல கங்களின் வழக்கமான பணிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன. இதற்காக பிரத்யேக மென்பொருள் உருவாக்கப்பட்டு, 40-க்கும் மேற்பட்ட அரசுத் துறைகள், அலுவலகங்கள் அதைப் பயன்படுத்தி வருகின்றன.

மின்-அலுவலகம் திட்டம் செயல்படுத்தப்பட்டு ஓராண்டாகியுள்ள நிலையில், இதுதொடர்பாக தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் கூறியதாவது: மின்-அலுவலகம் திட்டத்தின் கீழ் தலைமைச் செயலகத்தில் அனைத்து மேஜைகளும் கணினி பயன்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இதுவரை 80 ஆயிரம் கோப்புகள் மின்னணு மயமாகியுள்ளன. தற்போது அனைத்து கோப்புகளும் மின்னணு வடிவிலேயே தயாரிக்கப்படுகின்றன. பழைய கோப்புகளை மின்னணு மயமாக்கும் பணியும் தொடர்ந்து நடக்கிறது.

குறிப்பாக, போக்குவரத்து, திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள், கால்நடை பராமரிப்பு, வருவாய் உள்ளிட்ட துறைகளில் காகிதக் கோப்புகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து, கணினிமயமாக்கப்பட்டுள்ளன. மாவட்டங்களில் வருவாய், ஊரக வளர்ச்சி, கனிமவளம் உள்ளிட்ட துறைகள் மின்-அலுவலகம் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தி வருகின்றன.

மாவட்ட நிர்வாக அலுவலகங்களில் இதுவரை 1.25 லட்சம் கோப்புகள் மின்னணு மயமாகியுள்ளன. கடந்த ஓராண்டில் 2.05 லட்சம் கோப்புகள் மின்னணு மயமாக்கப்பட்டுள்ளன. ஒரு கோப்புக்கு சராசரியாக 10 தாள்கள் என்று வைத்தாலும், 2 கோடிக்கு மேல் காகிதப் பயன்பாடு குறைந்துள்ளது. இதன்மூலம் கோடிக்கணக்கில் செலவு குறைந்துள்ளது. இவ்
வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in