1.60 லட்சம் குடிசை மாற்று வாரிய வீடுகளை இடித்துவிட்டு ரூ.2,080 கோடியில் புதிய குடியிருப்புகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

1.60 லட்சம் குடிசை மாற்று வாரிய வீடுகளை இடித்துவிட்டு ரூ.2,080 கோடியில் புதிய குடியிருப்புகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் 1.60 லட்சம் பழைய குடிசை மாற்று வாரிய வீடுகளை இடித்துவிட்டு, ரூ.2,080 கோடியில் புதிய குடியிருப்புகள் கட்டப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட காந்திபுரம் பகுதியில், மாநகராட்சி சுகாதாரத் துறை சார்பில் விலையில்லா கொசுவலை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கொசு வலைகளையும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அப்பாவு நகர், சுப்புப் பிள்ளை தோட்டம் பகுதியில் மறுகுடியமர்வு செய்வதற்கான தற்காலிக ஒதுக்கீட்டு ஆணைகளையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், துணை மேயர் மு.மகேஷ்குமார், மண்டலக் குழுத் தலைவர்கள் ஆர்.துரைராஜ், எம்.கிருஷ்ணமூர்த்தி உடனிருந்தனர்.

இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: குடிசை மாற்று வாரிய பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு, புதிதாக கட்டித்தருவதற்கு 18 மாதங்கள் ஆகும். அந்த சம்பவத்தில் குடியிருப்பாளர்கள் வெளியில் வசிக்க வேண்டியிருக்கும். அதற்காக ரூ.8 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டு வந்தது. திமுக ஆட்சியில் அது ரூ.24 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. சென்னையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் 270, 280 சதுர அடிகளில் இருந்தன. தற்போது தமிழக அரசு 420 சதுரஅடியில் குடியிருப்பு கடடித்தருகிறது. ஒவ்வொரு குடியிருப்பும் ரூ.13 லட்சத்தில் கட்டப்படுகிறது. இதில், ரூ.1.50 லட்சத்தை மத்திய அரசு தருகிறது. குடியிருப்பில் இருப்பவர்கள் ரூ.1.50 லட்சத்தை கொடுக்கின்றனர். மீதமுள்ள ரூ.10 லட்சத்தை தமிழக அரசு அளிக்கிறது. இதுபோல, தமிழகம் முழுவதும் 1.60 லட்சம் வீடுகள் கட்டப்பட உள்ளன. இதற்காக, ரூ.2,080 கோடி செலவிடப்படுகிறது. இந்த ஆட்சியில் பணிகள் நிறைவு பெறும்.

கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு மருத்துவர்கள் செய்த அறுவை சிகிச்சையில் தவறில்லை. அதிக ரத்தக்கசிவை கட்டுப்படுத்த கட்டு போடப்பட்டது. அதை குறிப்பிட்ட நேரத்துக்குள் அகற்ற வேண்டும். ஆனால், அப்படிச் செய்யாமல் அலட்சியமாக இருந்துள்ளனர். அது கொலைக் குற்றமா என்பதை சட்டம்தான் முடிவு செய்யும். தமிழகம் முழுவதும் உள்ள அறுவை சிகிச்சை மருத்துவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் வரும் 23-ம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடக்கிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுப்பதற்கான கூட்டமாக இது அமையும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.சென்னையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் 270, 280 சதுர அடிகளில் இருந்தன. தற்போது தமிழக அரசு 420 சதுர அடியில் குடியிருப்பு கட்டித் தருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in