

வேலூர்: பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர்கள் ஆர்எஸ்எஸ் தொண்டர்களாக பணியாற்றி வருகிறார்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டினார்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று (20-ம் தேதி) வேலூர் வந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, ''உயர் ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீதம் ஒதுக்கீடு என்பது அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையை தகர்க்க கூடிய ஒன்றாகும். சமூக நீதியை நீர்த்துப்போகச் செய்கிற முயற்சியாகும்.
ஏழை மக்களுக்கு உதவுவதை யாரும் எதிர்க்கவில்லை. முன்னேறிய சமூகமாக இருந்தாலும், மிகவும் பின்தங்கிய சமூகமாக இருந்தாலும் ஏழைகளுக்கு இலவச கல்வி, கடன் உதவி வழங்கலாம். கல்வி உதவிக்கடன் கூட வழங்கலாம். ஆனால், பொருளாதார அளவுகோலின் அடிப்டையில் இட ஒதுக்கீடு வழங்குவது எனும் நிலைபாடு என்பது அரசியலமைப்புச் சட்டம் உறுதிப்படுத்தி இருக்க சமூகநீதி கோட்பாடு சிதைக்கப்படும் வகையில் உள்ளது. இந்த நிலை பாட்டை பாஜக அரசு மேற்கொண்டு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதை எதிர்த்து வி.சி. கட்சி சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளோம்.
ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத்தின் படி நியமிக்கப்பட்டவர். மாநில அரசுகளுக்கு உதவுதற்கான தான் ஆளுநர்கள் நியமிக்கப்படுகிறார்கள். மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கு இணைப்புப் பாலமாக ஆளுநர் இருக்க வேண்டும். மாநில அரசு எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர் தான் ஆளுநரே தவிர ஆளுநர் எடுக்கும் முடிவுக்கு மாநில அரசு கட்டப்பட்டதல்ல.
இது தெரியாமல் தமிழக ஆளுநர் மட்டும் அல்ல பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் நியமிக்கப்பட்டுள்ள அனைத்து ஆளுநர்களும் மாநில அரசுகளுக்கு நெருக்கடி தருகின்றனர். இந்தியாவில் ஆளுநர்கள் ஆர்எஸ்எஸ் தொண்டர்களாக பணியாற்றி வருகிறார்கள். ஆளுநர்கள் அரசியல் பேசலாம், ஆனால், ஒரு இயக்கத்தை சார்ந்த அரசியல் பேசக்கூடாது, இங்குள்ள ஆளுநர்கள் ஆர்எஸ்எஸ் அரசியலை பேசுகின்றனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்எஸ்எஸ் ரவியாக இருப்பதால் எதிர்க்கிறோம்.
அதிமுகவை பார்த்து திமுக பயப்படுகிறது என்ற எடப்பாடி பழனிசாமி சொன்னால் அவர் சரியாக அரசியல் செய்கிறார் என அர்த்தம். ஆனால், அவரோ பாஜகவை பார்த்து திமுக பயப்படுகிறது எனக் கூறுகிறார். பாஜகவின் குரலாகத்தான் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். அதிமுகவை எடப்பாடி பழனிசாமி கை விட்டு விட்டார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன் உட்பட 6 பேரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவால் 6 பேர் விடுவிக்கப்பட்டதை தடுக்க முடியாது. சீராய்விலும் 6 பேரின் விடுதலையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்யும் என நம்புகிறோம்.
புதிய கல்விக் கொள்கையில் மாநில உரிமைகள் எவ்வாறு பறிக்கப்படுகிறது. மாணவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை விரைவில் மக்களே புரிந்துகொள்வார்கள். மத்தியில் உள்ள ஊடகங்கள் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகின்றன. இந்த மாயத்தோற்றம் தமிழகத்தில் எடுபடாது. தமிழகத்தில் பாஜகவை கண்டு யாரம் பயப்படவில்லை'' என்றார்.