Last Updated : 20 Nov, 2022 03:43 PM

 

Published : 20 Nov 2022 03:43 PM
Last Updated : 20 Nov 2022 03:43 PM

விழுப்புரம் | உயிரோடு இருக்கும்போதே இறந்துவிட்டதாக அறிக்கை: ஓய்வூதியத்திற்காக விண்ணப்பித்த முதியவர் அதிர்ச்சி

சேகர் தன் மனைவி கெங்கம்மாளுடன்.

விழுப்புரம்: மரக்காணம் அருகே ஓய்வூதிய தொகை கேட்டு விண்ணப்பித்த முதியவர் உயிரோடு இருக்கும் போதே இறந்துவிட்டதாக அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கேசவநாயக்கன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர்(63) முதியவரான இவர் தன் மகளை திருமணம் செய்து வைத்து விட்ட நிலையில் மனைவி கெங்கம்மாளுடன் வசித்து வருகிறார். இரண்டு கறவை மாடுகளை வைத்து பால்கறந்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு வாழ்ந்து வரும் இவர் கடந்த 2011ம் ஆண்டு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உறுப்பினராக சேர்ந்து அதற்கான அடையாள அட்டையையும் பெற்று வைத்துள்ளார்.

இந்நிலையில் முதியவர் சேகர், முதலைமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ்உறுப்பினராக இருப்பதால் மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.ஆயிரம் தனக்கு வழங்குவதற்கு ஆணை வழங்க கேட்டு கடந்த 2021ம் ஆண்டு மரக்காணத்தில் உள்ள வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து அதற்கான ஒப்புகை சீட்டையும் பெற்றார்.

சேகர் இறந்துவிட்டதாக தெரிவிக்கும் அரசு ஆவணம்

பின்னர் மரக்காணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட துறை அலுவலர்களை பலமுறை நேரில் சந்தித்து மாதாந்திர ஓய்வூதிய தொகை கிடைக்கவழிவகை செய்து தர வேண்டும் என சேகர் கேட்டு வந்துள்ளார். அப்போது ஓய்வூதிய தொகைக்கான ஆணை வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சமாக தருமாறு அங்கிருந்த ஊழியர்கள் கேட்டுள்ளனர். ஆனால் வறுமையின் பிடியில் இருந்த முதியவர்சேகரால் ரூ.5 ஆயிரம் லஞ்சத்தை தர முடியாததால் அவரது விண்ணப்பம் கிடப்பில்போடப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மரக்காணம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள சமூக பாதுகாப்பு திட்ட ஊழியர்களிடம் ஓய்வூதிய தொகை கேட்டு தான் விண்ணப்பித்திருந்த மனு குறித்து கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த ஊழியர்கள், கணினி மூலம் சரிபார்த்து விண்ணப்பதாரர் சேகர் உயிரிழந்து 4 மாதங்கள் ஆகிவிட்டதால் அவரின் மனு நிராகரிக்கப்பட்டுவிட்டது என சேகரிடமே கூறியுள்ளனர்.

இதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போன சேகர், தனது கிராமத்தில் உள்ள இளைஞர்கள் சிலரின் துணையுடன் ஓய்வூதிய தொகை கேட்டு தான் கொடுத்திருந்த விண்ணப்பித்தின் நிலை என்ன என்பது குறித்து ஆன்லைனில் பார்த்துள்ளார். அதில் அனைத்து ஆவணங்களும் சரி பார்க்கப்பட்டதில் சேகர் உயிரிழந்துவிட்டதால் அவரின் ஓய்வூதிய விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாக மரக்காணம் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியரால் சான்று வழங்கப்பட்டு அறிக்கை அளிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

லஞ்சம் கொடுப்பவர்களின் விண்ணப்பங்கள் உடனே அங்கீகரிக்கப்பட்டு அவர்களுக்குஅரசின் நலத்திட்ட உதவிகள் உடனே சென்றடைகிறது. லஞ்சம் கொடுக்க முடியாத தன்னை போன்ற பலரையும் உயிரிழந்துவிட்டதாக கூறி விண்ணப்பங்களை அரசு அதிகாரிகள் நிராகரிப்பு செய்து வருவது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x