Published : 20 Nov 2022 04:20 AM
Last Updated : 20 Nov 2022 04:20 AM
சென்னை: கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, ஐஎஸ்ஐஎஸ் சர்வதேச பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பில் இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில், சென்னையில் 4 இடங்களில் என்ஐஏ, மாநகர போலீஸார் சோதனை நடத்தினர்.
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த அக்.23-ம் தேதி கார் சிலிண்டர் வெடித்ததில், காரை ஓட்டி வந்த கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் (25) என்பவர் உயிரிழந்தார். பின்னர், அவரது வீட்டில் வெடிபொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அவரது கூட்டாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) இந்த வழக்கு விசாரணை மாற்றப்பட்டது.
விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், தமிழகத்தில் சென்னை, கோவை, திருவள்ளூர், நாகை உள்ளிட்ட 8 மாவட்டங்களிலும், கேரளாவில் பாலக்காடு உட்பட நாடு முழுவதும் 43 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் கடந்த 10-ம் தேதி சோதனை நடத்தினர். சென்னையில் புதுப்பேட்டை, மண்ணடி, பெரம்பூர், ஜமாலியா உட்பட 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகளுடன், போலீஸார் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் 18 பேர் அடையாளம் காணப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும், சென்னையில் சிலருக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக 100 பேர் கொண்ட பட்டியலை மாநில உளவுப் பிரிவு போலீஸாருக்கு மத்திய உளவுத்துறை அனுப்பியதாக கூறப்பட்டது. இதனால், சென்னையில் மண்ணடி, முத்தியால்பேட்டை, எஸ்பிளனேடு, கொடுங்கையூர் பகுதிகளில் 5 இடங்களில் சந்தேகத்துக்கிடமான நபர்களின் வீடுகளில் சென்னை மாநகர போலீஸாருடன் இணைந்து என்ஐஏ அதிகாரிகள் கடந்த 15-ம் தேதி சோதனை நடத்தினர். இதில், முத்தியால்பேட்டையில் ஒருவரது வீட்டில் வெளிநாட்டு பணம் உட்பட ரூ.10.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் நேற்றும் போலீஸாருடன் இணைந்து என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்களாக இருக்கக்கூடும் என மத்திய உளவுத்துறை அனுப்பிய 100 பேர் பட்டியலின் அடிப்படையில், சந்தேகப்படும் நபர்களின் வீடுகளில் இந்த சோதனை நடந்ததாக கூறப்படுகிறது.
அந்த வகையில், சென்னை வேப்பேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் புகாரி, ஓட்டேரி எஸ்.எஸ்.புரம் ஷாகுல் அமீது, முத்தியால்பேட்டை பிடாரியார் தெரு உமர் முக்தால், ஏழுகிணறு விவிஎம் தெரு முகமது ஈசாக் ஆகியோரது வீடுகளில் நேற்று காலை 6 மணி முதல் 9 மணி வரை 3 மணி நேரம் தொடர் சோதனை நடைபெற்றது.
10 நாட்களில் 3-வது சோதனை: ஓட்டேரியில் நடந்த சோதனையில் ஒரு சூட்கேஸ், சில ஆவணங்கள் சிக்கியதாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. மற்ற இடங்களில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சோதனை நடத்திய இடங்களில் பறிமுதல் செய்த செல்போன்களை தடயவியல் துறையினரிடம் போலீஸார் ஒப்படைத்துள்ளனர். ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளுடன் அவர்களுக்கு ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்று போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 10 நாட்களில் 3-வது முறையாக சென்னையில் என்ஐஏ சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT