Published : 15 Nov 2016 08:11 PM
Last Updated : 15 Nov 2016 08:11 PM

ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்ய ஆதார், பான் கார்டுகளை காண்பிப்பது கட்டாயம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

அதிக தொகை கொண்ட முன்பதிவு டிக்கெட்டுகளை ரயில் கவுன்ட்டர்களில் ரத்து செய்ய ஆதார் அல்லது பான் அட்டையை காண்பிப்பது அவசியம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையாக ரூ.500, ரூ.1000 செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு, கறுப்புப் பணத்தை வைத்திருப்போர் அதை பல்வேறு வழிகளில் மாற்ற முயற்சித்து வருகின்றனர். வரும் 24-ம் தேதி வரை ரயில் நிலையங்களில் பழைய ரூபாய் நோட்டுகள் பெற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல இடங்களில் வழக்கத்துக்கு அதிகமான அளவில் டிக்கெட் முன்பதிவுகள் நடைபெற்றதை ரயில்வே நிர்வாகம் கண்டறிந்துள்ளது.

அதிக தொகைக்கு முன்பதிவு செய்துவிட்டு பின்னர் அவற்றை ரத்து செய்தால் குறிப்பிட்ட தொகை போக மீதி பணம் கிடைக்கும் என்பதால் சிலர் இந்த முயற்சியில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தன. இந்தச் செயலைத் தடுக்கும் வகையில் ரயில்வே நிர்வாகம் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''கவுன்ட்டர்கள் மூலம் அதிக தொகைக்கு முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுகளை ரத்து செய்யும்போது, பயணிகள் தங்களுடைய பான் அட்டை அல்லது ஆதார் அட்டையை அங்குள்ள ரயில்வே ஊழியரிடம் காண்பிக்க வேண்டும்.

பின்னர், அங்குள்ள ரயில்வே ஊழியர் தரும் முன்பதிவை ரத்து செய்யும் படிவத்தை பூர்த்தி செய்து, அந்த படிவத்துடன் அவரவர் கையொப்பமிட்ட பான் அட்டை அல்லது ஆதார் அட்டை நகல், எந்தக் கணக்கில் தொகையை செலுத்த வேண்டும் என்ற வங்கிக் கணக்கு விவரம் ஆகியவற்றை தலைமை வர்த்தக மேலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x