

சென்னை: அர்ஜுனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு வேலம்மாள் பள்ளி நிர்வாகம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2022-ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் கடந்த 14-ம் தேதி அறிவிக்கப்பட்டன. இதில் சென்னை முகப்பேர் வேலம்மாள் மெயின் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துவரும் இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா, அர்ஜுனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அகில இந்திய செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
குடியரசுத் தலைவர் மாளிகையில் வரும் 30-ம் தேதி நடக்க உள்ள தேசிய விளையாட்டு விருதுகள் விழாவில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் இருந்து விளையாட்டுத் துறையின் 2-வதுஉயரிய விருதான ‘அர்ஜுனா’ விருதை இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா பெற உள்ளார்.
ஏசியன் கான்டினென்டல் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை அவர் சமீபத்தில் வென்றார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், உலக சாம்பியனான கார்ல்சனை வெற்றி கொண்டார். தனது கடும் முயற்சி, விளையாட்டு ஆர்வம், சிறப்பான ஆட்டம் மூலமாக மாபெரும் அங்கீகாரம் பெற்று, தொடர் வெற்றிகளை குவித்துவரும் பிரக்ஞானந்தாவுக்கு முகப்பேர் வேலம்மாள் பள்ளி நிர்வாகம் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.