Published : 19 Nov 2016 10:35 AM
Last Updated : 19 Nov 2016 10:35 AM

‘ரூபாய் நோட்டு நடவடிக்கை விளைவால் தமிழக கூட்டுறவு வங்கிகள், சங்கங்கள் முடங்கும் நெருக்கடி’

ரூ.500, 1000 நோட்டுகள் தடை உத்தரவு விளைவுகளினால் தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்கள் இன்னும் 10-20 நாட்களில் முடங்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ள்து.

உடனடியாக இந்த வங்கிகள் எதிர்கொள்ளும் சில குறிப்பிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று உயரதிகாரி ஒருவர் வெள்ளியன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் மற்றும் மாவட்ட மைய கூட்டுறவு வங்கியின் நிர்வாக இயக்குநர், ரூ.500, 1000 நடவடிக்கையினால் மாவட்ட வங்கிகள் மற்றும் அது சார்ந்த முதன்மை வேளாண் கூட்டுறவு சங்கங்கள் பல லட்சம் விவசாயிகளுக்கு கடன் அளிக்க முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் எதிர்ப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

“இதே நிலை நீடித்தால் இன்னும் 10-20 நாட்களில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்கள் ஆகியவை முற்றிலும் முடங்கும் அபாயம் நிகழ்ந்து விடும்” என்று அச்சம் வெளியிட்டுள்ளார் அவர்.

விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 239 முதன்மை வேளாண் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன, இதில் சுமார் 18 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். 5 கூட்டுறவு மார்க்கெட்டிங் சங்கங்கள் உள்ளன. இவை மற்றும் இவை சார்ந்த சங்கங்கள் ரூபாய் நோட்டு அறிவிப்புக்குப் பின் கடும் நெருக்கடிகளில் சிக்கித் தவித்து வருகின்றன.

மாநில அளவில் நிலைமைகளை விளக்கிய அவர், “தமிழகம் முழுதும் மாவட்ட மைய கூட்டுறவு வங்கிகள், மற்றும் இதனைச் சார்ந்த 4,500 முதன்மை வேளாண் கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு கடன் சங்கங்களைச் சேர்ந்த சுமார் 2,000 ஊழியர்கள் என்று பணத்திற்கு கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன” என்றார்.

மேலும் தற்போது நிகழ்ந்து வரும் வடகிழக்குப் பருவ மழைக் காலம்தான் வேளாண்மை நடவடிக்கைகள் உச்சத்திற்குச் செல்லும் காலமாகும். இந்நிலையில் முதன்மை வேளாண் கூட்டுறவு சங்கங்களின் மூலம் விவசாயிகளுக்கு கடன் வழங்கக்கூடாது என்ற உத்தரவு பயிர்க்கடன் பெறுவதற்கான அவர்களது நியாயமான உரிமையை மறுப்பதாகும் என்கிறார் அந்த அதிகாரி.

இந்தப் பின்னணியில் மாவட்ட மைய கூட்டுறவு வங்கிகள் மற்றும் முதன்மை வேளாண் கூட்டுறவு சங்கங்கள் தடை செய்யப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகளை கடன்கள் பெற்றவர்கள் திருப்பி அளிக்கும் போது ஏற்றுக் கொள்ளுமாறு செய்ய உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் வாராந்திர பண எடுப்பு உச்ச வரம்பான ரூ.24,000 என்பதையும் இது தொடர்பான ஆர்பிஐ சுற்றறிக்கைகள் மீதான நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்க உயர் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளது.

நீதிபதி என்.கிருபாகரன் வரும் 28-ம் தேதி இந்த விவகாரத்தை மேலும் விசாரிக்கவுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x