Published : 20 Nov 2022 04:50 AM
Last Updated : 20 Nov 2022 04:50 AM
திருவண்ணாமலை: வந்தவாசியில் அரசுப் பேருந்து படிக்கட்டில் இருந்து மது போதையில் இருந்த பயணியை நடத்துநர் கீழே தள்ளிய வீடியோ வைரலானது.
வந்தவாசியில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகத்தின் 2-வது பணிமனை மூலமாக வந்தவாசியில் இருந்து பெங்களூருவுக்கு பேருந்து இயக்கப்படுகிறது. அதன்படி இயக்கப்பட்ட அரசுப் பேருந்து, பெங்களூருவில் இருந்து வந்தவாசிக்கு கடந்த 17-ம் தேதி நள்ளிரவு வந்தடைந்தது.
வந்தவாசி பழைய பேருந்து நிலையம் முன் நிறுத்தப்பட்ட பேருந்தில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கினர். ஆனால், மதுபோதையில் இருந்த ஒரு பயணி மட்டும் இறங்காமல் இருந்துள்ளார். அவரை கீழே இறக்கும் முயற்சியில் நடத்துநர் பிரகாஷ் ஈடுபட்டுள்ளார். போதையில் இருந்த பயணி, பேருந்து படிக்கட்டில் தள்ளாடியபடி நின்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்து, பேருந்து படிக்கட்டில் இருந்து பயணியை நடத்துநர் கீழே தள்ளியுள்ளார்.
இதில், சாலையில் போதையில் இருந்த பயணி விழுந்துள்ளார். இதையடுத்து பணிமனைக்கு அரசுப் பேருந்து புறப்பட்டு சென்றது. இந்நிலையில் மதுபோதையில் இருந்த பயணியை பேருந்து படிக்கட்டில் இருந்து நடத்துநர் கீழ தள்ளிவிடும் வீடியோ, சமூக வலைதளத்தில் வைரலானது.
இது குறித்து பணிமனை அதிகாரி ஒருவர் கூறும்போது, “அவலூர்பேட்டையில் ஏறிய பயணி பேருந்திலேயே மது அருந்தியும், பேருந்து உள்ளேயே சிறுநீர் கழித்தும், பிற பயணிகளுக்கு தொந்தரவு அளித்தது தெரியவந்துள்ளது. மேலும் பயணியை கீழே தள்ளிவிட்டது தொடர்பாக நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT